பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
51

 தமிழக அரசு கவிழ்க்கப்படுமானால், அது இந்தி ஆதிக்க எதிர்ப்பு உணர்ச்சிக்கே அழிவை உண்டாக்குவது ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மொழிப் பிரச்சினையில் இன்றுள்ள மைய அரசுக்குத் துணை நின்றே நாம் நியாயத்தைப் பெற முடியும் என்று எடுத்துக் கூற விரும்புகிறோம்.

தேசியக் கொடி எரித்தல், தனித்தமிழ்நாடு கிளர்ச்சி போன்றவை நடத்தப்படுவது நமது இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியையே பாழ்படுத்திவிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

நன்கு சிந்தித்து மாணவர்கள் எந்தத் துண்டுதலுக்கும் செவி சாய்க்காமல் தேசியக் கொடி எரித்தல், தமிழ்நாடு தனிநாடு ஆகத் தீர்மானம் போடுதல் போன்ற செயல்களில் ஈடுபடா திருக்கும்படி வேண்டிக் கொள்கிறோம்.

இத்தகைய செயல்களின் மூலம் மொழிப்பிரச்சனை தீராது. நியாயம் கிடைக்காது. நியாயத்தைப் பெறுகிற வரையில் அழுத்தமும் அமைதியும் வன்முறை அற்றதும் நாட்டைப் பிளவுப் படுத்தாததுமான செயல்களில் நமது மாணவர்களின் நலன்களைப் பாதுகாத்திட நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொன்றாய்க் காங்கிரஸ் அல்லாத மாநிலங்களைக் கவிழ்த்துப் பாவக்கறை படிந்த மைய அரசின் கைகள், தமிழக மண்ணில் நிலையான ஆட்சியாக உள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசைக் கவிழ்த்துக் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைத்திட முனைவதாகத் தெரிகிறது. ஐந்து நாட்களுக்கு முன்னேதான் வங்காளத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தி அறிக்கையில் கையெழுத்திட்ட குடியரசுத் தலைவர் நேற்று உத்திரப் பிரதேசத்தில் தம் ஆட்சியை அமைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் நிலையாகத்தான் கழக அரசைக் கலைத்துவிடக் காங்கிரசார் முயலுகின்றனர். அதற்கு இடம் கொடுக்கும் எந்தச் செயலையும் தமிழகத்தில் யாரும், குறிப்பாக, மாணவர்கள் செய்திட வேண்டாம்.

இன்றைய தமிழக அரசு நீடித்திருந்தால் மட்டுமே எங்கள் பணி வெற்றிபெற இயலும். ஆகவே, மாணவர்கள் எமது திட்டத்தையும் செயல்திட்டத்தையும் உணர்ந்து, இப்போது அவர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை நிறுத்தி, அமைதியை மட்டும் தந்திடும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

25-2-68 அன்று அண்ணாவும், இராஜாஜியும் வெளியிட்ட கூட்டு அறிக்கை