பக்கம்:அண்ணா காவியம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை

தாழ்ந்து கிடந்த மக்களைத் தம் பேச்சாலும், எழுத்தாலும், தியாகத்தாலும் தட்டி எழுப்பிய ஒரு பெரு மகனைப் பற்றிய-ஆம், நமது நெஞ்சமெல்லாம் பூரித்துப் பரவியிருக்கும் பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றிய முதற்காவியமே இக் கவிதை நூல்.

அவர் ஒரு முழு மனிதராக வாழ்ந்து மறைந்தவர். சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, சாமானியராக வாழ்ந்து, ஒவ்வொருவரும் எப்படி வாழவேண்டும் என்று ஒரு வாழ்வியலை அளித்து, மொழியாலும், இனத்தாலும் எப்படி உணர்வோடு வாழ வேண்டும் என்பதையும் உணர்த்தி, எப்படி அரசோச்ச வேண்டும் என்பதையும் இத் தரணிக்குணர்த்திய தன்னேரில்லாத ஒரு தலைவன் அல்லவா. நமது அறிஞர் அண்ணா!

அந்த மாமனிதரைப்பற்றி, அவருடனே நெருங்கிப் பழகிய அண்ணன் கவிஞர் கருணானந்தம் அவர்கள், 'அண்ணா காவியம்’ என்னும் தலைப்பில் காவியமாக்கி னார். முதற்பதிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது, திருத்திய இரண்டாம் பதிப்பு - பூவழகி வெளியீடாக வருகிறது.

படிக்கப் படிக்கத் தெவிட்டாத தெள்ளு தமிழ்க் தாவியம் இது. அண்ணா என்னும் தாரக மந்திரத்தை உச்சரிக்கும் ஒவ்வொரு தமிழ் மகன் கையிலும் இருக்க வேண்டிய ஒப்பற்ற காவியக் கருவூலம்.

இந்த அருமையான காவியத்தை-எங்கள் பதிப்பகத்தில் வெளியிடப் பேருவகையுடன் அனுமதி அளித்து உதவிய அண்ணன் கவிஞர் அவர்களுக்கு எங்கள் அன்புகலந்த நன்றி. என்றும் எங்கள் மனத்தில் நீங்காத இடம் பெற்றிருக்கும், பேரறிஞர் அண்ணா அவர்களையும் வணங்கி, ஆதரவு தரும் தமிழ் மக்களையும் வணங்கி, நன்றி தெரிவிக்கிறேன்.

அண்ணா அவர்கள் அடையாறு மருத்துவமனையில் இருந்தபோது, சாலையில் தவங்கிடந்த இலட்சக்கணக்கான மக்களில் நானும் ஒருவன் என்பதை நினைவுகூர்ந்து, இந் நூலை வெளியிடுவதில் மனநிறைவு கொள்ளுகிறேன்.

மூவேந்தர் முத்து (பூவழகி பதிப்பகம்)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/17&oldid=1078008" இலிருந்து மீள்விக்கப்பட்டது