பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

அண்ணா—சில நினைவுகள்


“செய்யலாம். பிடிவாதமா, சட்டத்தை மீறுவேண்ணும் சொல்லலாம். இருக்கிற நம்ம ஆட்களிலே உறுதியான சிலபேர் ஜெயிலுக்குப் போய் ஏழெட்டு வருஷம் உள்ளே கிடக்கலாம். கட்சி என்ன ஆகும்? நான் அதைத் தான் யோசிக்கிறேன்” என்றார்-அண்ணா. அவர் மன உளைச்சல் நன்கு வெளிப்பட்டது. தமிழ் தேசியக் கட்சி அமைத்திருந்த சம்பத், தோழர் அண்ணாதுரை என்று அண்ணாவையும், மற்ற தி மு. க. தலைவர்களையும், திட்டியதோடு, கழகத் தொண்டர்களையும் தாக்கியதுடன் நில்லாமல், திராவிடநாடு பிரிவினைக் கொள்கையையும் கடுமையாக எதிர்த்தார். “என்னண்ணா இது விபரீதமா யிருக்கு? நீங்க அய்யாவை விட்டு வந்த பிறகும், அவரைத் திட்டவும் இல்லை; சுயமரியாதைக் கொள்கைகளை நூத்துக்கு நூறு ஏத்துக்கிட்டீங்களே ஒழிய, விமர்சிக்கவுமில்லை! இவரு ஏன் இப்படிப் போனாரு!” என்று அண்ணாவிடம் விசனப்பட்டேன். துரத்துக்குடி பொதுக் கூட்டத்தில் அண்ணா பேசினார் :- “திராவிட நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையை விட்டுவிடுமாறு தோழர் சம்பத் சொல்கிறார். நேரு கூறினார் விட்டுவிடுமாறு. அப்போது நாம் விட்டிருக்கலாம்: அகில உலகத் தலைவர் சொல் கிறாரே-அதைக் கேட்டு நடப்போமே, என்று! ராஜாஜி கூறியபோது விட்டிருக்கலாம்; ராஜ தந்திரி ஒருவர் கூறுகிறாரே என்று! காமராஜர் சொன்னாரே, அப்போது விட்டிருக்கலாம்; கர்ம வீரர் சொல்கிறாரே என்று! அப்போதெல்லாம் கைவிடாத நாம், சம்பத் சொல்கிறாரே என்பதற்காகவா விட்டுவிடப் போகிறோம்? தேவை யில்லை! நாம் தொடர்ந்து செல்வோம்!” என்று.

திராவிடநாடு பிரிவினைக் கோரிக்கையைத் தி. மு. க. கைவிடுகிறது என்று அண்ணா அறிவித்தவுடன், கோழைகள் என்று அதே சம்பத் ஏசினார். அண்ணா இதற்காக வருத்தப்படவில்லை. மாறாக, சம்பத் இதை ஓங்கி உரத்த குரலில் அடிக்கடி சொல்லட்டும் என்றார்.