பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

225

“தலைவரும் கட்சியும் என் போக்கு தவறு என்று கருதி, என்னைக் கட்சியை விட்டு நீக்கினாலும், நான், சமூக சீர்திருத்தம், பொருளாதார சமத்துவம், திராவிடத் தனியரசு எனும் அடிப்படைக் கொள்கைகளைக் கட்சிக்கு வெளியே இருந்தாகிலும் செய்து வருவேன் என்பதைக் கூறி இந்த அறிக்கையை முடிக்கிறேன்!

அன்பன்

சி. என். அண்ணாதுரை

(“திராவிடநாடு” 10.8.1947)

1951-ல் மாயூரத்தில் தி. மு. க. தஞ்சைமாவட்ட முதல் மாநாடு நடந்தது. அங்கு தமது உரையினிடையே அண்ணா குறிப்பிட்ட ஒர் கருத்து மறக்க வொண்ணாதது. அண்ணா சொன்னார்: “தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளில் எல்லாம், பட்டினக்கரைகளில் எல்லாம், மூலை முடுக்குகளிலெல்லாம், தெருத்தெருவாகக் கருப்பு சிவப்பு இரு வண்ணக்கொடி பறக்க வேண்டும். அது திராவிட முன்னேற்றக் கழகக் கொடியாகத்தான் இருக்கவேண்டும் என்பதல்ல! திராவிடர் கழகக் கொடியாகவும் இருக்கலாம். ஆனால் இந்த இரண்டில் ஏதாவது ஒரு கொடி-கருப்பு சிவப்புக்கொடி கட்டாயம் பறந்தாக வேண்டும்!” என்றார் பெருந்தன்மையுடன், எதிரிகள் தாக்கும்போது திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கியாகப் (double barrel gun) பயன்படும் என்றாரே. திராவிடர் கழகத்துக்கும், தானே அதிகாரி போன்ற உரிமையுடன்! வேறு யாரால் இங்கனம் பேச இயலும்? அண்ணா இப்படியெல்லாம் பேசியபோது, நான் மட்டும் ஆச்சரியப்படுவதில்லை. அண்ணா என்றாவது ஒரு நாள் வந்து அய்யாவைச் சந்திப்பார் என்றே நான் நம்பி வந்தவன்.

அ.-15