பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அண்ணா—சில நினைவுகள்


பல்வேறு கோணங்களில் படம் எடுத்தார் சுந்தரம். (அண்ணாவும் நானும் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒரு படத்தை இன்னமும் எனக்குத் தரவில்லை சுந்தரம்?)

மாலையில் சென்னை திரும்பினோம். பிடிக்கப்பட்ட படங்கள் பின்பு “முரசொலி”யில் மலர்ந்தன. ஆனால், அன்று எடுக்கப்பட்ட படங்களிலேயே உலகப் புகழ் பெற்றது, நாங்கள் திடீரென்று எடுத்த முதல் படந்தான்; அண்ணா மேலாடையின்றி, இயல்பான தோற்றத்தோடு, ‘பூக்காடு’ படித்துக் கொண்டிருக்கும் போஸ். ஒவியர் செல்லப்பன் முகப்பு ஒவியம் தீட்டிய அட்டையுடன் கூடிய புத்தகம் அந்தப் “பூக்காடு.”

A. S. ராமன் ஆசிரியராகப் பணியாற்றிய நேரத்தில் Illustrated Weeklyயில் அண்ணாவைப் பற்றி வரலாற்றுப் புகழ் மேவிய கட்டுரை ஒன்றைத் தீட்டியபோது, சுபா சுந்தரம் கிளிக் செய்த இந்தப் படமே மிக முக்கிய இடம் பெற்றிருந்தது. அதற்குப் பின்பும் அந்த போட்டோ நிறையப் பயன்படுத்தப்பட்டுள்ளது எல்லாருக்கும் நினைவிருக்குமே!

1971-இல் என்னுடைய பூக்காடு நூலுக்குத் தமிழக அரசின் முதல் பரிசு கிடைத்தது. ஆனால் எனக்கு அதனி லும் பன்மடங்கு மகிழ்வும் பெருமையும் ஏற்படுவது, அண்ணா அவர்கள் என்னுடைய சுவைஞர் என்பதைப் புறச்சான்றுடன் மெய்ப்பிக்கும் இந்த இயல்பான புகைப் படத்தைப் பார்க்கும் நேரத்தில்தான்!