பக்கம்:அண்ணா நாற்பது.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14. மெரினாவின் கடற்கரையில் மெல்லென்ற காற்றிடையே
ஒருநூறு சொற்பொழிவும் உளங்கவர ஆற்றியுளாய்
ஒருநூறு கோடிமக்கள் உளங்குளிரக் கேட்டுவந்தார்
மெரினாவின் மேல்வந்து மீண்டுமுரை தருவதென்றோ?


15. தமிழர் தளபதியே தளர்விலாத் தாளாளா
அமிழ்தே அருநிதியே அறிவுக் களஞ்சியமே
கமழு நற்பல்கலைக் கழகமே கதிரொளியே
இமிழ்கடல் சூழுலகில் எங்குனைக் காண்போமால்!


16. சிரித்த முகமெங்கே சிந்தனைகூர் நெஞ்செங்கே
கருத்து நயங்கொழிக்கும் கற்பனைசால் நாவெங்கே
விரித்துப் பொருள்வரையும் விரைவுமிகு கையெங்கே
கருத்தைக் கவர்ந்தீர்க்கும் கனிவுசெறி கண்ணெங்கே


17. கற்பனையின் பேரூற்றே கலைகல்விக் களஞ்சியமே கனிவு மிக்க
நற்பண்பின் கொள்கலமே நடமாடும் நூலகமே நாவில் வல்லோய்
அற்புமிகு அண்ணாவே அடக்கத்தில் ஆழ்கடலே அறிஞர் ஏறே
பொற்புமிகு அமைதியினில் பொன்மலையே புகழ்வீசிப் போய்விட் டாயே!


18. முடியுடை மூவேந்தர் முத்தமிழ்நா டாளுகையில்
படையெடுத் துவந்தார்கள் பன்னாட்டு மன்னரிங்கே
அடிமைத் தளையில்யாம் அறுநூறாண் டாயிருக்க
விடிவெள் ளியாயண்ணா விரைந்தெழுந்தாய் தமிழ்விண்ணில்,


19. தமிழகத்தில் தமிழ்மொழியே தனியாட்சி மொழியாகத் தங்கச் செய்தாய்
தமிழகம்தன் திருப்பெயராய்த் ‘தமிழ்நாடு’ எனும்பெயரே தாங்கச் செய்தாய்

8