உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


ஏனம்மா அவ்வளவு சிறு சிறு விளக்குகள் உள்ளன? என்று கேட்கிறது.

அம்மா அந்தச் சந்திரனைப் பிடித்துத் தா? நான் பந்தாட வேண்டும் என்று கேட்கிறது இன்னொரு குழந்தை. நிலவையும் பார்த்துவிட்டுத் தன் அன்னையின் திருமுகத்தையும் பார்த்து இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று யோசிக்கிறது இன்னோர் குழந்தை.

குழந்தை உள்ளத்திற் குமுறி எழும் எண்ணங்கள் வேடிக்கையானவை—ஆனால் முடிவுகளல்ல; ஆசை அலைகள் அவை. மனித சமுதாயத்தில் குழந்தைப் பருவத்திலேயும் இதேபோலத்தான் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், இயற்கைக் காட்சிக்கும் ஏதோ ஒரு வகையான காரணம் தேடி அலைந்து, பலப்பல விசித்திரமான காரணங்களை, விளக்கங்களை மனித சமுதாயம் எண்ணிற்று—பேசிற்று—நம்பலாயிற்று.

மனித சமுதாயத்தில் பாலப் பருவத்தில் கிடைத்த பல உண்மைகள், இன்று உண்மைகள் என்று உலகினரால் ஒப்புக் கொள்ளப்படுவதில்லை. பர்மாவை ஜப்பானியர் பிடித்தபோது, அவர்கள் வெளியிட்ட நோட்டுகள் எப்படி இன்று பர்மாவில் செல்லுபடியாகாதோ, அதுபோலச் செல்லுபடியாகாத நோட்டுகளைச் சேகரித்து வைத்துச் சிறு பிள்ளைகள் விளையாடினால், கேடு அதிகம் இல்லை; அந்த நோட்டுகள் செல்லுபடியாக வேண்டும் என்று வாதாடினால், நாட்டுக்கு எவ்வளவு பெரிய தொல்லை. அதுபோல மனித சமுதாயத்தின் சிறுபிள்ளைப் பருவ எண்ணங்களை—ஏற்பாடுகளை—தத்துவங்களை—விளக்கங்களை இன்னும் நம்பித்தான் தீரவேண்டும், அவைகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும் என்று வாதிடுவது எவ்வளவு பெரிய கேடு என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். எதிர்பார்ப்பதற்கு நேர்மாறான நிகழ்ச்சிகளைக் காணும்போது, சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் துவக்கப்பட்ட காரியம், நல்ல முயற்சிக்குப் பிறகும் முறிகிறபோது, போட்ட கணக்குப் பொய்யாகும்போது, விதைத்து முளைக்காதபோது, நண்பர்களிடமிருந்து பகை கிளம்பும்போது, ஓவியம் தீட்டுகையில், வண்ணக் கலயம் உடையும்போது, வீணையை மீட்டும்போது நரம்பு அறுந்து, அறுந்த நரம்பு வேகமாகக் கண்ணில் பாயும்போது, இவைபோன்ற திகைப்பூட்டும் சம்பவங்கள்—மனதைக் குழப்பும் நிகழ்ச்சிகள் நேரிடும்போது, மனம் ஒடியுமோ என்று மருளும்போது ஏதேனும் ஓர் வகை ஆறுதல் தேவைப்படுகிறது. அப்போது விதியெனும் தத்துவம் வெற்றிச் சிரிப்புடன்