உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


மக்கள் உள்ளத்திலே புகுந்து கொள்ளுகிறது. குடி புகுந்த பிறகு விதிதான் எஜமானன். அந்த எண்ணத்துக்கு இடமளித்தவன், அதற்கு அடிமை. அடிமையை ஆட்டிப் படைக்கிறது விதி. பிறகு தெய்வீக முலாம் பூசிவிட்டனர் விதியென்ற தத்துவத்திற்கு. ஆகவேதான் அதனை உதறித் தள்ள நெஞ்சு உரம் பலருக்கு வருவதில்லை.

மேலுலகத்தில் ஏதோ ஓர் பெரும் ஏடு இருப்பது போலவும், அதிலே பூலோக வாசி ஒவ்வொருவரின் வாழ்க்கைக் குறிப்பும் முன் கூட்டியே எழுதி வைக்கப் பட்டிருப்பது போலவும், அதன்படித்தான் சகல காரியமும் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. பல வழிகளில் இந்த நம்பிக்கையைப் பலப்படுத்தினர். எவ்வளவு பெரிய கேடு செய்கிறோம் என்பதை அறிந்தார்களோ இல்லையோ, மனிதன் மனதை முடமாக்குகிறோம்; கருத்தைக் குருடாக்குகிறோம் என்று தெரிந்து செய்திருந்தால், அவர்கள் மாபெரும் துரோகிகள்; தெரியாமல் செய்திருந்தால் ஏமாளிகள். கபடராயினும், கசடராயினும் அவர்கள் கட்டிவிட்ட கதைகள், இந்த நாட்டு மக்களைத் தலைமுறை தலைமுறையாகக் கெடுத்துவிட்டது—தன்னம்பிக்கையைத் தகர்த்து எறிந்தது—முயற்சிகளை முறியடித்தது—முற்போக்கைக் கெடுத்தது.

அதோ ஓர் அழகு மங்கை; வயது பதினெட்டு; ஐயோ என்று அலறுகிறாள்; அவளைத் தொட்டுத் தாலிகட்டிய கிழவன் இறந்ததால், வாழ்வு கருகிற்றே என்று வேதனையால்.

விதியடி அம்மா விதி—பலர் கூறுகிறார்கள். எரியும் கொப்பரையாக உள்ள அவள் மனதிலே எண்ணெய் ஊற்றுகிறார்கள். இந்தக் கிழவனுக்குச்—சாக்காட்டை நோக்கி நடக்கும் வயோதிகனுக்கு—என்னைத் தாரமாக்கினீர்களே—தர்மமா, என்று துணிந்து கேட்டு விடுகிறாள் ஓர் அறிவழகி.

அது உன் எழுத்தடியம்மா எழுத்து—நீ வந்த வழி—உனக்கு உள்ள விதி—உடனே பதில் கிடைத்து விடுகிறது.

எலும்பு முறியப் பாடுபடுகிறேனே, ஏழையாக வதைகிறேனே என்று ஓலமிடுகிறான் பாட்டாளி—நீ கொடுத்து வைத்தது அவ்வளவுதான்—உடனே பதில் கிடைத்துவிடுகிறது.

கடை வீதிக்குச் செல்கிறோம், கையில் பணத்துடன். கடை வீதி போய்ச் சேருவதற்குள் கடை வீதியிலே உள்ள பண்டங்களே