உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3


பொதுச் சேவைபுரியும் சந்தர்ப்பம் என்ற முறையில் அமையவேண்டும்.

ம. பொ. சி:- ஆமாம்! இதை யார் மறுக்க முடியும்? பத்திரிகையைப் பலசரக்குக் கடைபோல, இரும்புத் தொழிற்சாலையைப் போல, இலாபந் தரும் தொழிலாக—என் சுகத்துக்கு, என் வாழ்வுக்கு, என் குடும்பத்துக்கு, எனக்குச் சொத்து சுகம் தேடிக்கொள்ள, நிலபுலம் தேட உபயோகித்துக் கொள்கிறேன் என்று யார் கூறுவார்கள்.

அண்ணா:- கூறமாட்டார்கள். ஆனால், பத்திரிகைத் தொழிலிலேயும் மற்றத் தொழில்களின் மூலம் பணம் குவிப்பதுபோல் குவிக்க முடியும் என்பது உண்மைதானே.

ம. பொ. சி:- உண்மைதான். பத்திரிகைத் தொழிலின் மூலம் பணம் திரட்ட முடியும். திரட்டியுமிருக்கிறார்கள்.

அண்ணா:- அது போலவே, பத்திரிகைத் தொழிலிலே, வேறு தொழில்களுக்குப் போடுவது போலவே பெரும் மூலதனம் போடுகிறார்கள். ஆயிரக்கணக்கில் ஆட்களை அமர்த்துகிறார்கள். நவீன விஞ்ஞான சாதனங்களை அமைக்கிறார்கள். வியாபார முறைகள் அனைத்தும் அந்தத் தொழிலுக்கு இருக்கக் காண்கிறோம்.

ம. பொ. சி:- அமைப்பு, அளவு, ஆகிய எதைக் கவனித்தாலும், பெரிய தொழிற்சாலை போன்றே காணப்படும் பத்திரிகை நிலையங்கள் பல உள்ளன இந்த நாட்களில்.

அண்ணா:- ஆமாம்! இந்தப் பத்திரிகை பல இலட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன. இதிலே விளம்பரம் செய்வதென்றால், அங்குலத்துக்கு இருபது ரூபாய் தரவேண்டும். பன்னிரண்டு பக்கம் கொண்டதாகப் பத்திரிகை இருந்தால், அதிலே விஷயங்கள், கருத்துக்கள் ஆறு பக்கம் தேறும். மற்ற இடம், விளம்பரம்—என்று இது போன்ற நிலையிலே உள்ள பத்திரிகைகள் நடத்தப்படுகின்றனவே. இலட்சக்கணக்கான வரவு செலவுள்ள பெரிய தொழில்—ஆயிரக்கணக்கில் வேலை செய்வோர் உள்ள இடம், அப்படிப்பட்ட பத்திரிகைகளை—பொதுச் சேவை என்று கூறமுடி யுமா? அதன் உரிமையாளரின் வருவாயும், வாழ்க்கை நிலையும், அவருடைய நிலபுலங்களும், மோட்டார் வசதிகளும், இலாபத்தின் விளைவுகள் அல்லவா? அவ்வளவு இலாபகரமான தொழிலை—அவரை மாளிகை வாசியாக்கி, சீமானாக்கி வைக்கும் தொழிலை