உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமதர்மம்



சி. என். அண்ணாத்துரை

சமதர்மம்—ருசிகரமான வார்த்தை—நாட்டிலே இன்று பலராலும் பேசப்பட்டுவரும் இலட்சியம். பலராலும் என்றால் உண்மையிலேயே அந்த உயர்ந்த இலட்சியத்தின்படி சமூகம் திருத்தி அமைக்கப்பட வேண்டும். மக்களுக்குள் எந்தக் காரணங் கொண்டும் பேத உணர்ச்சியோ, அதனாலான கேடுகளோ இருத்தல் கூடாது. வாழவேண்டும்; பிறர் வாழ்வைக் கெடுக்காமல் என்ற சிறந்த நோக்கங் கொண்டவர்கள் மட்டுமல்ல, நாட்டிலேயுள்ள காட்டு ராஜாக்கள்கூடப் பேசத் தலைப்பட்டு விட்டனர்.

நாம் அனைவரும் சமம் என்பது உறுதியாச்சு என்னும் கவிதா நடையிலே மட்டுமல்ல; “அவனும் மனுஷன் தானேய்யா, அவன் என்ன தலையில் கொம்பு முளைத்தவனா” என்று தெருக்கோடி பாஷையில்கூட.

சமத்துவமாக வாழவேண்டும் என்ற பேச்சு, ஒவ்வொருவர் பேசும்போதும் ஒவ்வொரு விதமான பொருள் இருக்கிறது.

முடிதரித்த மன்னன் கூறுகிறான்: “நமது ஆட்சியிலே அனைவரும் சமம்; நாம் நமது மக்களிலே பேதா பேதம் பார்க்க மாட்டோம்” என்று. மன்னனின் சமத்துவ நோக்கத்தை வெளிப்படுத்தும் பேச்சாகவே இது முதலில் தோன்றும். ஆனால் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால்...நமது ஆட்சியிலே நமது கண்களுக்கு...என்ற வாசகங்கள் மூலம் மன்னன் தன்னை அனைவருக்கும் மேலாக்கிக்கொண்டு, தனது அதிகாரத்தை ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறான் என்பது விளங்கும்.