6
இவ்வளவு சிக்கல் நிறைந்த இந்தப் பிரச்சினையைச் சமதர்மத்தை—ஏதோ மிகச் சுலபத்திலே சாதித்து விடக்கூடும் என்ற முறையிலே பலர் பேசுகின்றனர். சாதாரணமாக நாம் பேசுவதில்லையா? சங்கீதம் என்ன சார், பிரமாதம்? சாரீரம் கொஞ்சம் நன்றாக இருக்கவேண்டும்; சுருதியுடன் சேர்ந்து பாடவேண்டும்; ‘தாளம் தவறக்கூடாது இவ்வளவுதானே’ என்று; பாட ஆரம்பிக்கும்போது தானே தெரிகிறது. சாரீரம் வித்வானுடன் ஒத்துழைக்க மறுப்பதும், சுருதியுடன் அவர் மல்லுக்கு நிற்பதும், தாளம் அவருக்குச் செய்யும் துரோகமும், அதுபோலத்தான் சமத்துவம் சமதர்மம் போன்ற இலட்சியங்களைப் பேசுவது சுலபம். சாதிப்பது கடினம். அந்த இலட்சியத்தின் சாயலை—முழுப்பயனைக் கூட அல்ல—சாயலைப் பெறுவதற்குப் பல நாடுகளில் பயங்கரப் புரட்சிகள் நடந்திருக்கின்றன. இன்று நாட்டிலே மக்கள் அனைவரும் சமம் என்று பேசுமளவிற்கு வந்திருக்கிறோம்—பலர் தெளிவற்ற முறையில் விளக்கமான திட்டமும் இல்லாமல்.
“காக்கை குருவி எங்கள் ஜாதி”—“ஜாதிகள் இல்லையடி பாப்பா”—பாரதியார் பாடினார்.
அவருக்கு இல்லை ஜாதி, ஜாதி இருக்கவேண்டும் என்று பேசுபவனையே அவர் மனிதனென மதிப்பதில்லை. ஆனால் அவர் நாட்டில் என்ன நிலை? பாரதியார் பாடின அன்று அல்ல. இன்னும் என்ன நிலை? ஜாதி, மத, குல, பொருளாதார பேதங்கள் மக்களை முன்னேற ஒட்டாதபடி, மூச்சுத் திணரும்படி, முதுகெலும்பை முறிக்கும்படி அழுத்துகின்றன.
இந்நிலையில் சமத்துவம் மலர்வதெங்கே? சமதர்மம் தோன்றுவதெங்கே? அதன் முழுப்பயனாகித் தோழமையைக் காண்பது எங்ஙனம்? தோழமை ஆழ்ந்த கருத்துள்ள அழகான சிறுசொல்.
ஒற்றுமை—கூட்டுறவு—ஒப்பந்தம்—கூடி வாழ்தல்—நட்பு—அன்பு—என்றுள்ள எத்தனையோ பதங்களும், ஒவ்வோர் அளவு வரை மட்டுமே சொல்லக்கூடியவை—முழுத் திருப்தி தருபவையல்ல—தோழமை என்ற நிலையை அடையும் படிக்கட்டுகள் இவை—