2
விட்டு, கேட்டதும் மக்களுக்கு, ஓர் ஆவல்—பற்று—பாசம்—ஏற்படும்படி செய்துவிட்டு, ஆசையைத் தட்டி எழுப்பிவிட்டு, வீணையை மீட்டத் தொடங்கியதும், இசை கேட்க வருபவனின் காதுகளை அடைப்பதுபோல, எழில்மிகு சித்திரத்தைத் தயாரித்துக் காணவாரீர் என்று அனைவரையும் அழைத்துக் காண வரும் சிலரின் கண்களைக் கட்டியிருப்பது போல, பழச்சாற்றின் இனிப்பைக் கூறிக்கொண்டு, பருகக் கொஞ்சம் தருக என்று கேட்பவனை விரட்டுவது போல—ஆலயங்களுக்கு மகிமையும், பலனளிக்கும் சக்தியும் இருப்பதைக் கூறிவிட்டு, அங்கு வரக்கூடாது—நுழையக் கூடாது என்று சிலரை அல்ல, ஏறக்குறைய எட்டுகோடி மக்களைத் தடுத்து வருகிறோம். இன்று நேற்றல்ல; தலைமுறைத் தலைமுறையாக அவர்கள் ஏதோ குற்றம் செய்ததற்குத் தண்டனையாக அல்லது—அவர்கள் தமக்கு இழைக்கப்படும் கொடுமையாக, நம்மைத் தண்டிக்கும் சக்தியைப் பெறாத ஒரே காரணத்தால். இது முறையா—நீதியா—தருமமா—நெடுநாட்களுக்குச் செல்லுமா—இவை கேள்விகள் அல்ல—எண்ணத்தில் கபடமில்லாத எவருக்கும் இருக்கும் இருதயத் துடிப்புகள்.
பொருளைக் காட்டி மறைப்பார் குழந்தைகளிடமிருந்து பெற்றோர். நாமோ புனித ஸ்தலங்களின் பெருமையைக்கூறிப் பூட்டி விடுகிறோம், அங்கு ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் வரக்கூடாது என்று. ஏன்? முடிந்தது செய்து வந்தோம் என்பதுதான் உண்மையான காரணம், மற்றக் காரணங்கள், மனதிலே எழும் அலைகள், உண்மையல்ல.
பயனும் பெருமையும் இருப்பதாகவும் ஒரு இடத்தைக் குறிப்பிட்டு, அதே இடத்துக்கு ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினரை நுழையக்கூடாது என்று சொன்னால், எல்வளவு வேதனை இருக்கும். கூறும் நமக்கு எவ்வளவு கடினமான மனது இருக்கவேண்டும் என்பதை எண்ணிப் பாருங்கள். இன்றிரவு உங்கள் கையை மூடிக்கொண்டு, உங்கள் வீட்டுக் கொஞ்சு மொழிக் குழந்தையைக் கூப்பிட்டுத் “தம்பி! கைக்குள்ளே ஒரு அருமையான வஸ்து இருக்கிறது—பளபளப்பானது—யாருக்கும் கிடைக்காது” என்று கூறுங்கள். குதித்துக்கொண்டே அந்தக் குழந்தை