தீண்டாமை (ஆலயப் பிரவேசம்)
சி. என். அண்ணாத்துரை
தமிழ் நாட்டிலே எங்குப் பார்த்தாலும் சிற்பிகளின் சிந்தனையைச் சிறப்புற விளக்கிடும் எழில் மிகுந்த கோயில்கள் உள்ளன. முடியுடைய மூவேந்தர்களும், பல்லவரும் கட்டிய ஆலயங்கள்— அவை ஒவ்வொன்றுக்கும் சிறப்புகள் மகிமைகள் கூறப்பட்டுள்ளன பாடல் பெற்ற ஸ்தலங்கள் என்று புகழப்படுகின்றன. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு அற்புதம் கூறப்படுகிறது. தாயுமானார், தயாபரர், தீராத வல்வினையைத் தீர்த்தவர், தில்லையில் திருகடனம் புரிபவர், திருவரங்கத்து அண்ணல் என்று பெயரினாலேயே பொருட் செறிவும் வைத்துப் பேசப்படுகிறது. பாடல் கேட்டு கதவு திறக்கப்பட்ட கோயில், படிக்காசு கிடைத்த கோயில், தூது சென்ற தலம், என்று பல்வேறு மகிமைக் கதைகள் கூறப்படுகின்றன.
அதாவது, ஆலயங்கள் ஏராளமாக உள்ளன. அவைகளில் அழகும் மகிமையும் பேசப்படுகின்றன. அங்கு சென்று சேவிப்பது இகபரசுகம் தரும் என்று பேசப்படுகிறது. கோயிலில்லா ஊரிலே குடியிருக்கவே வேண்டாம் என்பது பழமொழி. திருக்கோயிலை வலம் வராத கால் என்ன காலோ. ஐயனைச் சென்று காணாத கண் என்ன கண்ணோ என்று பஜனைகள் நடக்கின்றன. தூய்மையின் இருப்பிடம் என்று கூறப்படுகிறது. இவ்வளவு கூறிவிட்டு, ஏடுகளை இதற்காகக் குவித்துவிட்டு, இறைவனின் இல்லங்களை எங்கும் எழுப்பிவிட்டு, அவற்றின் அருமை பெருமை, அங்குப் போக வேண்டியதின் அவசியம், போனால் ஏற்படும் பலன், ஆகியவற்றைப் பாட்டாகவும், கூத்தாகவும் படமாகவும் எடுத்துக் காட்டி