உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


யையோ நாடுகின்றனர். இந்து சமுதாயம் குறைந்து வருகிறது என்ற யூகம் கூறியாகிவிட்டது.

வீரம், தியாகம், கடமை, பக்தி எனும் பல்வேறு உணர்ச்சி நரம்புகளை மீட்டிப் பார்த்தாகிவிட்டது.

நந்தனாரை, திருப்பாணாழ்வாரை—மக்களுக்குக் கவனப்படுத்தியாகிலிட்டது.

“ஆவுரித்துத் தின்று உழலும் புலையரேனும், அவர் கண்டீர் யாம் வணங்கும் தெய்வமாமே” என்று பாசுரம் பாடிப் பார்த்தாகிவிட்டது.

வேறு நாடுகளிலே, தேவையில்லாத தீங்கு தருவதான முறையை மாற்ற எடுத்துக்கொண்ட முயற்சியைவிட, இங்கு நம் நாட்டில் தீண்டாமை ஒழிப்புக்காகவும், திருக்கோயில் திறப்புக்காகவும் எடுத்துக் கொண்ட முயற்சி மிக அதிகம்.

“ஜாதி மதங்களைப் பாரோம்! உயர் ஜன்மம் இந்தத் தேசத்தில் எய்தினர் ஆயின், வேதியர் ஆயினும் ஒன்றே! அன்றி வேறு குலத்தவர் ஆயினும் ஒன்றே” என்ற பாடலை எத்தனை எத்தனையோ ஆயிரம் மேடைகளில் பாடிக் காட்டியாகிவிட்டது.

வியாசரின் உண்மைக்கருத்து, பராசரின் பரந்த நோக்கம் வேதத்தின் சாரம், உபநிஷத்தின் உண்மை என்று தத்துவார்த்தங்கள் பேசிப் பார்த்தாகிவிட்டது.

எத்தனை மாநாடுகள்—எவ்வளவு அறிக்கைகள்—சத்தியாக்கிரகங்கள் உண்ணாவிரதங்கள்—கிளர்ச்சிகள்—இந்த மாசு துடைக்க ஏற்பட்டன. ஏற்பட்டும்—ஆம்! பெருமூச்சுடன் தான் பேசித்தீர வேண்டியிருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மனைக் காண முடிகிது; அரங்கநாதரைச் சேவிக்க முடியாது. பழனியாண்டவரைப் பார்க்க முடியும்; திருமலையப்பனைத் தரிசிக்க முடியாது. நந்தனுக்கு முக்தி தந்த தில்லைச் சபேசன் பெருமையை நவரசங்களுடன் எடுத்துக் கூறுவரேயன்றி அவரைக் காண முடியாது