உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


பரிதாபம்! மக்களிடை காட்டிய பேத உணர்ச்சி, இன்று கடவுள் வரை சென்று விட்டது. காண அனுமதிக்கும் சாமி சில; காணக்கூடாத கடவுள் சில என்னும் நிலைமை வந்துவிட்டது. ஏன்? யார் யாரைக் கேட்பது.

அறிவு, ஆண்மையைப் பார்த்துக் கேட்க வேண்டிய அவசியமான, அவசரமான கேள்வி இது.

இடையிடையே, சில இடங்களில் சில கோயில்கள் திறந்து விடப்பட்டன என்று செய்தி வெளிவரக் காண்கிறோம். ஆந்திர நாட்டவரும், சட்டசபை அங்கத்தினருமான பி. எஸ். மூர்த்தி என்பவர், ஆதித்திராவிடரைத் திருப்பதி மலைக்கு அழைத்துச் செல்லப் போவதாக அறிவிக்கிறார். வைதிகர்கள் எதிர்க்கத்தான் எண்ணுகிறார்கள். ஆனால்,

இன்று அந்தப் பழைய நாள் பரபரப்பும் பதைபதைப்பும் இல்லை. ஆனால் பழைய நாட்டுக் கோட்பாடுகளின் படியே நடக்கவேண்டும் என்று எண்ணும் வைதிகர்களின் மனப்பான்மை அடியோடு மாறிவிட்டது என்று கூறிவிட முடியாது.

திகைப்பு, திகில்; தடுத்தே தீரவேண்டுமென்ற போக்கு; இதனால் சர்வநாசம் சம்பவிக்குமோ என்ற சஞ்சலம்—இன்று குறைவு; குறைந்துகொண்டு வருகிறது. ஆனால் அடியோடு மனமாறுதல் ஏற்பட்ட பிறகுதான், ஆலயப் பிரவேசம் சாத்தியமாகும் என்று கூறுவது ஆண்மை, அன்பு, அறிவுடைமை ஆகாது. எனவே, சட்டம் தேவை; அதை விளக்க ஒரு பிரசாரத் திட்டம் தேவை— அவசரமாக தேவை.

ஆலயங்களில் முன்னாள் இன்னாள் நிலைமை; அதனால் ஏற்படும் பலன்; யாராருக்கு எந்தெந்த வகையான பலன் உண்டாகிறது என்பவை, தனிப்பிரச்சினைகள்.

அதுபோலவே ஆதித்திராவிடர்கள் முன்னேற, ஈடேற என்னென்ன வழி; ஆலயப் பிரவேசம் ஒன்று மட்டும் அவர்களின் கஷ்டத்தைப் போக்கிவிடுமா என்பவையும் தனிப் பிரச்சினைகள்.