உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


இப்போது நான் கூறுவது, அந்தத் தனிப்பிரச்சினைகளைப் பற்றி அல்ல. இந்நாட்டிலே ஆலயங்கள் உள்ளன; ஆதித்திராவிடர்களும் இருக்கின்றனர்.

ஆலயங்களிலே நாம் போகலாம்; அவர்கள் வரக்கூடாது என்று நாம் கூறுகிறோம். நாமே யாரை ஆலயங்களுக்குள் வரக்கூடாது என்று தடுக்கிறோமோ அவர்களைத் தாய்நாட்டு மக்களென்றும், சகோதரர்கள் என்றும் கூறுகிறோம். நாட்டு மக்களின் கணக்கைப் பற்றிப் பெருமையாக 40 கோடி பேர், நாம் என்று பேசும் போது, “கிட்டே வராதே, எட்டி நில்,” என்று கூறித் தடுக்கிறோமே, அவர்களின் தொகை 8 கோடி என்பதை மறந்தே விடுகிறோம். ஐந்தில் ஒரு பாகம் அவர்கள்—பஞ்சேந்திரியத்தில் ஒன்று பழுதாகி விட்டதுபோல—நாட்டைக் கேட்டினில் ஆழ்த்துகிறோம்.

ஆலயங்களிலே பலவகையான சீர்திருத்தம் வேண்டும் என்று பேசுபவர்களே கூட, அங்கு ஆதித்திராவிடர்கள் வருவதைத் தடுக்கிறார்கள்.

அதுபோலவே, ஆதித்திராவிடர்களுக்குக் கல்வி, சுகாதார வசதி செய்து தரவேண்டுமென்று அன்புடன் பேசத் தயாராக இருப்பவர்கள்கூட, அவர்களுக்குக் கோயில்—பிரவேசம் கூடாது என்று பேசுகின்றனர்.

இந்த விசித்திர மனப்பான்மைக்குக் காரணம் இருக்கிறது. அர்த்தமற்றதல்ல இந்தப்போக்கு.

உபகாரம் செய்யச் சம்மதிக்கிறார்கள்—உரிமையைத் தருவது என்றால் சங்கடப்படுகிறார்கள். உபகாரம் செய்வது சுலபம்; உரிமையைத் தருவது கஷ்டம். உபகாரம் செய்வதிலே காட்ட வேண்டிய தியாக உணர்ச்சி குறைவு—தீரமும் குறைவுதான்—ஆனால் உரிமையைத் தருவதற்குத் தியாக உணர்ச்சியும், தீரமும் அதிகமாகத் தேவை.