7
உபகாரத்தைப் பெறுபவருக்கும், தருபவருக்கும் இடையே ஏறத்தாழ, அடிமை—எஜமானன் என்ற நிலைமைதான் இருக்கும். உரிமை தருவது, பெறுவது என்பது இந்த நிலையை அல்ல. இருவருக்கும் சமநிலை, சம அந்தஸ்து ஏற்படச் செய்கிறது. உபகாரம், “ஐயோ பாவம்” என்ற உணர்ச்சியின் விளைவு. உரிமை, ‘ஏன்’ என்ற முழக்கத்தின் விளைவு. எனவேதான் சம்மதிப்பதில்லை. தீண்டாமை முறை உரிமையைப் பறிக்கும் சூது.
தீண்டாமை—எவ்வளவு வேதனையான வேடிக்கை இது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
கெட்ட பொருளைத் தொடக்கூடாது—குப்பை கூளம், நாற்றப்பொருள், ஆகியவைகளிடம் நிச்சயமாகத் தீண்டாமை அனுஷ்டிக்கத்தான் வேண்டும். அக்கினித் திராவகம், வெடி குண்டு, விஷம், சீறும் நாகம், கொட்டும் தேள் இன்னும் பலப் பல உண்டு ஆபத்துத் தரக்கூடியவை. அவைகளைத் தீண்டாதிருக்க வேண்டும்—நியாயம் அது. ஆனால் பலகோடி மக்களை, தாய்நாட்டாரை, மூதாதையர் கால முதற்கொண்டு நம்முடன் வாழ்ந்து வருபவர்களைத் “தீண்ட மாட்டோம்” என்று கூறுவது—தீண்டாமையை அனுஷ்டிப்பது—எவ்வளவு வேதனை? எவ்வளவு அர்த்தமற்றது என்பதை எண்ணிப் பார்க்கும் எவரும், “இனியும் அந்தக் கொடுமை இருக்கவேண்டும்” என்று வாதாட முடியாது—தீண்டாமையால் இன்ன நலன் விளைந்தது—விளைகிறது—விளையும் என்று கூறவும் முடியாது. அதற்கு மாறாகத் தீண்டாமையால் ஏராளமான கேடுகள் விளைந்திருப்பதைக் காட்ட முடியும். விவரமாகக்கூட விளக்க வேண்டியதில்லை. எட்டுக்கோடி பேர் உள்ளனர் தீண்டாதார். அவ்வளவு பேர்களுக்கும் மனப்புண் உண்டாக்குகிறோம். இதைவிட வேறு கேடு என்ன வேண்டும்.
தயை, தர்மம், அன்பு, நேசம் முதலிய பண்புகள், நாட்டு மக்களிடம் வளரவேண்டும். அதுதான் அவர்கள் நாகரிக வாழ்வு, வாழ்கிறார்கள் என்பதற்கு அடையாளம் என்றெல்லாம் அறிஞர்கள் கூறக் கேட்டு அகமகிழ்கிறோம். விவேகானந்தரின் உபதேசத்தைப் புகழ்கிறோம். வடலூர் இராமலிங்கரின் சமரச சுத்த