8
சன்மார்க்கத்தை வாழ்த்துகிறோம். இராஜாராம் மோகன்ராய், தயானந்தர் ஆகியோருக்கு விழா நடத்துகிறோம். நம்முடைய நாட்களிலேயே ஹரிஜன் நிதிக்குப் பணம் கூடத் தருகிறோம். ஆனால், “தீண்டாமையை அறவே ஒழிக்க வேண்டும் வாரீர்” என்று அழைத்தால், தர்மம், தயை, அன்பு, நட்பு, முதலிய குணங்களெல்லாம், ஓட்டுக்குள் மறைந்து கொள்ளும் ஆமைகளாகி விடுகின்றன. எங்கிருந்தோ கிளம்பி, வைதிகம் என்னும் நாகம் சீறுகிறது. அதை அடக்க அறிவாயுதம் வேண்டும்.
கள்ளக் கையொப்பக்காரன் கரம் கூப்புகிறான்—விபசாரி விசேஷ அபிஷேகம் செய்விக்கிறாள். குடி கெடுப்பவன் கும்பாபிஷேகம் செய்கிறான். கொள்ளை இலாபமடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கிறான். ஒழுக்கக் குறைவு உள்ளோர், அழுக்கு மனம் படைத்தோர், இழுக்கான வழி செல்பவர்கள், ஆலயங்களிலே நுழைய முடியாதபடி தடை உண்டோ? இல்லை.
ஆனால் ஆதித்திராவிடரை மட்டும், ஆலயத்துக்கு வரக்கூடாது என்று தடுக்கிறோம்—நியாயமா?
அல்ல என்றுதான் தெரிகிறது. ஆனால்.... என்றுதானே பதில் கூறுகிறீர்கள்?
ஆனால், ஆனால் என்று அநேக காலமாகக் கூறிவந்தாகிவிட்டது! நண்பர்களே ஆனால், என்பதை மறந்து ஆகையால் தீண்டாமை கூடாது—ஆலயப்பிரவேசம் அவசியம்தான் என்று, அச்சத்தை விட்டுத் தீர்ப்பளியுங்கள்.
ஆனால்...என்று நெகிழ்ந்த நிலையிலேதான் மக்கள் பேசுகிறார்கள். அதற்கு அர்த்தம், கோயிலுக்குள் தீண்டாதாரை விடக்கூடாது என்பதல்ல. ஆனால் சர்க்கார் சட்டம் செய்து விடட்டுமே என்றுதான் மக்கள் கூறுகிறார்கள் என்று சர்க்கார் எண்ண வேண்டும், மக்களின் மனம் இன்று அத்தகைய சட்டமே தேவைப்படாத அளவு பண்படவில்லை. ஆனால் அத்தகைய சட்டம் வருவதைத் தடுத்தே ஆகவேண்டும் என்ற மனநிலை இல்லை. இந்தச் சமயந்தான் கோயில் நுழைவுக்கான சட்டம் செய்யும் சரியான சமயம்—என்று சர்க்காருக்குக் கூறுகிறேன்—பிரஜை என்ற முறையில்.
இவ்வரிய சொற்பொழிவைப் புத்தக வடிவாக்க உரிமை தந்த சென்னை வானொலி நிலையத்தாருக்கு எமது நன்றி