உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுதந்தர இந்தியாவில்
வாலிபர் தேவை



சி. என். அண்ணாத்துரை.

வாலிபர்கள் உரிமைப் போர்ப்படையில் ஈட்டி முனைகள், அவர் தம் உள்ளத்தில் புரட்சிப் புயலிருக்கும். வாழ்க்கை எனும் பொய்கையிலே, விசாரம் என்னும் நஞ்சு கலக்கப்படாத பருவம். பகுத்தறிவு எனும் பகலவன், எறிபட்டு விஷப் பூச்சிகள் போன்ற சுயநல சுகக் கருத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கும்; தூய்மையான அந்த வாலிப உள்ளங்களில்.

சந்தனக் காட்டைக் கடந்து மணமும் குளிர்ச்சியும் மருவி மக்களை மகிழ்விக்க வருகிறதே தென்றல், அது போன்றது வாலிபம்.

மாயா வாதமும், மனமருட்சியும் வாலிபர்களிடம் நெருங்க நடுங்கும். வெட்டிப் பேச்சைத் தட்டி நடக்கும் தீரன், வீணரின் கொட்டத்தை அடக்கியாக வேண்டும் என்ற வீரம், ஆபத்துக்களைப் பொருட்படுத்தாமல் அநீதியைக் கண்டால் கொதித்தெழுந்து தாக்கும் பண்பு, வாலிபர்களிடயே மிகுந்திருக்கும். முடியுமா? காலம் சரியா? போதுமான பலம் இருக்கிறதா? நாளைவரை பொறுத்திருக்கக் கூடாதா? என்பன போன்ற பேச்சுக்கள் வாலிபர்களுக்கு இனிப்பாக இரா. கேட்டாயோ இந்தக் கொடுமையை? சும்மா இருப்பதோ? நாம் என்ன சொரணையற்றவர்களோ புறப்படு, போரிடு, அநீதி ஒழியுமட்டும் அல்லது நாம் ஒழியும்வரை போர். இந்தப் பேச்சுத்தான் வாலிபர் செவி ஏறும். வாலிபர்கள்