3
சுதந்தரம்—விடுதலை—என்றால், சட்ட சம்பந்தமான சொற்களின் மாற்றம் என்றல்ல வாலிபன் எண்ணுவது. புதிய நிலை—புது அழகு—புது உருவம்—புதிய மகிழ்ச்சி. நாடு புதுக்கோலம் கொள்வது என்றே கருதுகிறான் உண்மையும் அதுதான்.
“ஏன் இவ்வளவு வறுமை?”—கேள்வி.
“என்ன செய்யலாம்; அடிமை நாட்டில் இருக்கிறோம்”—இதுதான் பதில்.
“ஏன் தற்குறித்தனம் தலைவிரித்தாடுகிறது?”
“அடிமைத்தனம், அன்னியராட்சி.”
தொழில் வளராத காரணம்?—கேள்வி.
கூட்டிலிட்ட பறவை, பறக்குமா?—பதில்.
இங்ஙனம் நாட்டிலே காணப்படும் நானாவிதமான கோணல்களுக்கும் ஒரே காரணத்தைக் காட்டி, இவ்வளவும் போக ஒரே ஒரு மருந்து உண்டு, அதுவே சுதந்தரம் என்று பன்னிப் பன்னிக் கூறப்பட்டது, வாலிபர்கள் சொக்கினர்; அந்த இன்பத்தை எண்ணி உழைத்தனர் இன்பம் காண—ஊராருக்கும் உரைத்தனர் சுதந்தர இந்தியாவிலே.
சுகம் பிறக்கும்;
அறிவு வளரும்;
ஆளடிமையாதல் ஒழியும்;
செல்வம் கொழிக்கும் ;
என்றெல்லாம்.