உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


இத்தகைய சித்திரம், சுதந்தர இந்தியா என்பதறிந்து வாலிபர்கள், அதனைத் தீட்டத் தயாராக வேண்டும்.

சுதந்தரமடைந்த நாடு, நெடுங்காலத்துக்கு முன்பு, ஏதேதோ வர்ணங்கள் கொண்டு தீட்டப்பட்டு, காலத்தால் மங்கி, உருவம் அழிந்து, வர்ணங்கள் குழைத்தும் கலைந்தும் போய், அவ்வப்போது திருத்தப்பட்டவைகளும் தேய்ந்துபோன, திரைபோலிருக்கும். துவக்கத்தில் நாலாந்தர, ஐந்தாந்தர நாடகக் கம்பெனிகளிலே காணலாம் அதுபோன்ற திரைகளை.

நெடுங்காலம் அடிமைப் பிடியிலிருந்து விடுபட்டுச் சுதந்தரம் அடைந்த எந்த நாடும், அந்தத் திரைபோலத்தான் இருக்கும். அதுபோதும் என்று திருப்திப்பட்டால் பயனில்லை. அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்ம் திருத்துவோம் என்றாலும் பயனில்லை நாலாந்தர நாடகக் கம்பெனி கதிதான். புகழ் பூஜ்யம்; வருவாயும் கிடைக்காது. திரையைத் தீட்டியவர், வர்ணஜால வரப்பிரசாதர் ஆயிற்றே அப்படிப்பட்டவர் தீட்டியதை அழித்தெழுதும் யோக்கியதை அடியேனுக்கு உண்டா, என்று உபகாரம் பேசிப் பயனில்லை அழித்தெழுதத்தான் வேண்டும். வாலிபர்களின் திறமையால் புதிய சித்திரம் தீட்டப்படவேண்டும். அதற்குத் தேவைகள் சில பல உண்டல்லவா? வித விதமான வர்ணங்கள்; அவைகளைக் கொட்டிக் கலக்கி ஊற்றிவைக்க வட்டில்கள், தீட்டுக்கோல், இவைகளையெல்லாம் விட முக்கியமாகத் தீட்டும் திறம்பெற வழி வகைகள் இவ்வளவும் வேண்டுமல்லவா? சுதந்தர இந்தியாவில் வாலிபர் செய்யவேண்டிய வேலைக்கு இத்தகைய தேவைகள் உள்ளன. போரிட்ட காலம் நாடி முறுக்கேற்றிய நேரம்—நல்வாக்குக் கொடுத்த வேளை—இவை தீர்ந்துவிட்டன. சுதந்தர இந்தியாவிலே, வளைவுகளை நிமிர்த்த, படுகுழிகளை மூட, பாதைகளைச் செப்பனிட, சூது மதியினரை அடக்க, சொந்த மதியற்றோருக்கு அறிவு புகட்ட, சுரண்டுபவனை அடக்க, சோர்ந்திருப்பவனுக்கு உரம் ஊட்ட, பஞ்சம் வராமல் தடுக்க, படிப்பைப் பரப்ப தொழிலை வளர்க்க, வாலிபத்தை வளமாக்க—எண்ணப்போனால் மளமளவென்று பலப் பல வேலைகள் தெரியும் மனக் கண்முன்;