இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பத்திரிகைத் தொழில்
பொதுச் சேவையா, சொந்தத் தொழிலா?
சி. என். அண்ணாத்துரை.
அண்ணா :– வணக்கம்! ம. பொ.சி.; பத்திரிகைத் தொழில் பொதுச் சேவையா? சொந்தத் தொழிலா? என்பதுபற்றி, இப்போது நாம் விவாதிக்கப் போகிறோம்.
ம. பொ. சி :– ஆமாம், பயனுள்ள விவாதம். நாம் மட்டும் விவாதித்தால் போதுமா? நாட்டு மக்களும் விவாதிக்க வேண்டுமல்லவா?
அண்ணா :– நாம் அதைத் துவக்கி வைப்போம். தங்கள் கருத்து என்ன? பத்திரிகைத் தொழில் எப்படிப்பட்டது? பொதுச் சேவையா, சொந்தத் தொழிலா?
ம. பொ. சி :– பத்திரிகைத் தொழில் மட்டுமா, நாட்டிலே உள்ள எந்தத் தொழிலும் பொதுச்சேவையை நோக்கமாகக் கொண்டதாக இருக்கவேண்டுமேயொழிய, சொந்தத் தொழிலாக மட்டும் இருப்பது சரியல்ல.
அண்ணா :– ஆமாம். சிறந்த இலட்சியம் தாங்கள் சொல்வது. நாட்டு மக்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் சொந்த நலனுக்காக மட்டும் அமைவது கூடாது.