2
வாழ்க்கை முறையுடன் மோத வேண்டி நேரிட்டது. இயற்கையையும் அவன் எதிர்த்துத் தீரவேண்டி வந்தது.
சட்டம் மீறி அல்ல அவனுக்குத் தடை உத்திரவு பிறந்தது. காட்டில் உலவிய மிருகங்கள் மூலம், பல தடைகள், பல எதிர்ப்புக்கள், எதிர்பாரா ஆபத்துக்கள் ஏற்படலாயின. வாழ்வதற்காகப் போராட வேண்டி ஏற்பட்டது. வாழ்க்கைப் போட்டியிலும் ஈடுபடவேண்டி நேரிட்டது. தன்னை ஒத்த மற்றவர்களுடன், தன் சுகவாழ்வின் பாதுகாப்பைப் பற்றியும், அதனைக் கெடுத்திடக் கூடியவர்களை அடக்கித் தீரவேண்டிய அவசியத்தைப் பற்றியும், அதற்கு ஏற்றவிதமான முறைகளைப் பற்றியும் அவனே யோசிக்கவும், தீர்மானிக்கவும், முறைகள் வகுக்கவேண்டியவனானான். முதல் சட்டசபை கூடிற்று. சுதந்தர வாழ்வு சுகவாழ்வாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன், இப்படியிப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும் என்ற விதிகள் வகுத்தான். முதல் சட்ட புத்தகம் ஏற்பட்டது. விதிகளை மீறி நடந்தால் கேட்பதற்கு, இவருக்கு அதிகாரம் என்று குறித்தான். முதல் மாஜிஸ்ட்ரேட் தோன்றினார். விதிகளை மீறாதிருக்கிறானா என்று கவனித்துக் கொள்ள வழி வகுத்தான். முதல் போலீஸ்காரர் உலவினார். தடைகளை மீறாதிருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூற ஏற்பாடு செய்தான். முதல் உபதேசியார் கிளம்பினார் ; தடையை மீறினான், தவறு இழைத்தான் என்று வேண்டுமென்றே யார் மீதேனும் மற்றவர் பழி சுமத்தினால், கண்டறிந்து, தவறு செய்யவில்லை என்று காரணம் காட்டி வாதாட வழி செய்தான். முதல் வக்கீல் பேசலானார்; குற்றம் செய்தானா இல்லையா என்பதைச் சீர் தூக்கிப் பார்த்துத் தீர்ப்பளிக்கத் திட்டம் வகுத்தான். முதல் நீதிபதி நின்றார். இவ்விதமெல்லாம், முறைகளும், ஏற்பாடுகளும், திட்டங்களும் வகுக்கப்பட்டன. மெள்ள மெள்ள—படிப்படியாக போலீஸ்காரர், உபதேசியார், வக்கீல், நீதிபதி, சிறைக்காவலர், ஆகியோர் சூழ்ந்து கொண்டனர். இவ்வளவும் அவனாகத் தேடிக் கொண்டமை. எல்லாம் சுதந்தரத்தை இழந்துவிட வேண்டும் என்ற எண்ணங் கொண்டு அல்ல; அடிமைப் புத்தி ஏற்பட்டதால் அல்ல; சுதந்தரத்தின் விளைவாகச் சுக வாழ்வு கிடைக்கவேண்டும்