உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


அண்ணா  :– பொதுமக்களுக்கான பணி, அறிவு பரப்பும் அரும்பணி; குடியரசுக்குத் தேவையான திருப்பணி—என்றெல்லாம் எண்ணி அல்ல. அதிலேயும் தந்திரமான வியாபார முறையைக் கையாண்டு, பத்திரிகையை நேரமும் நோக்கமும் அறிந்து நேர்த்தியான வகையிலே வெளியிட்டு, மக்களின் சுவை, ஏதெதில் செல்லும் என்பதைக் கண்டறிந்து—அந்தப் பகுதிகளை அழகுறவெளியிட்டு, ஏராளமானவர்களை வாங்கும்படிசெய்து, இலாபம் பெறுவது என்று, தொழில் நிபுணர்கள் திட்டமிட்டு வேலை செய்கிறார்கள்.

ம.பொ.சி  :– உண்மைதான், இலாபம் பண அளவோடு மட்டுமல்ல செல்வமும் சேருகிறது செல்வாக்கும் பெருகுகிறது.

அண்ணா  :– ஆமாம். அதிகச் சிரமமல்லாமலே கூட முதல் போடுகிறான் ஆலை அரசன். தொழிலாளியின் திறமையினாலும், சிரமத்தினாலும் ஆடையின் தரம் உயருகிறது. மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். ஏராளமாக நாட்டிலே பரவுகிறது. இலாபம் குவிகிறது ஆலை அரசர்களுக்கு! அது போலவே, செய்திகளைத் திரட்டுவதில் நிபுணர்கள்—செய்திகளைச் சுவைப்படுத்தும் நிபுணர்கள்—இலக்கிய நடை எழுதுவோர்—கனல் கக்கிகள்—புயல் வரச்செய்வோர்—என்ற பலவித எழுத்தாளர்களையும், அவரவர் திறமைக்குத் தக்கபடி, எழுதவைத்து—இலாபம் திரட்டுகிறார் பத்திரிகைத் தொழில் அதிபர்! ஆலைத் தொழிலாளிக்கு ஆறணா என்றால், இவருக்குச் சற்று அதிகம் கிடைக்கும். அவ்வளவுதானே வித்தியாசம்?

ம.பொ.சி  :– தொழில் நிபுணர்களின் நோக்கமும் முறையும், நீங்கள் கூறுவது போலத்தான். அப்படிப் பட்டவர்களா பத்திரிகை நடத்துவார்கள்? துவக்கப்படும் பத்திரிகைகள் எல்லாம், இந்த முறையிலே இலாபம் திரட்டும் சாதனங்களாகவே அமைந்து விடுகின்றனவா?

அண்ணா  :– அப்படியல்ல; மரம் பழுத்தால் வௌவால் வரும் என்பார்களல்லவா? முதலாளிகள் பத்திரிகைத் தொழில் துறையின் பக்கம் பார்வையைச் செலுத்துகிறார்கள் இப்பொழுது—இதிலிருந்து மரம் பழுக்கிறது என்று யூகிக்க வேண்டியதுதானே? இலாபகரமான தொழிலாகிறது என்று தானே பொருள்?

ம. பொ. சி  :– நடைமுறைச் செலவுக்கே திண்டாட்டமாகி பத்திரிகையின் உருவம் இளைத்து, நடத்துபவரின் உள்ளம் ஒடிந்து போவதையும் பார்க்கிறோம்!