உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


இருந்து, அடுத்த தேர்தலின்போது, ஆளவந்தார்களை வீட்டுக்கு அனுப்பிவிட மக்களுக்கு அதிகாரமும் வசதியும் இருக்கிறது—மக்கள் ஆட்சியில்.

ஆனால் இதற்கு, பொதுப் பிரச்சினைகளில் கவலை செலுத்தும் பண்பு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத உயர் குணமும், அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்பட்டுக் கடமையை மறந்துவிடாதிருக்கும் ஆற்றலும் வேண்டும். இவைகளை எல்லாம்விட மிகமிக முக்கியமாகத், தங்கள் எண்ணத்தையும் கவலையையும் வேறு பக்கம் திருப்பி விட்டுவிடக் கூடிய பிரசாரத்தை நம்பி, அதற்குப் பலியாகிவிடாத, பண்பு வேண்டும்.

திறமை மிக்க ஓவியக் கலைஞன், திரையில் தீட்டிய, தீங்கனி குலுங்கும் மரத்தின் காட்சியைக் கண்டு உயிர்ப் பறவை மயங்கி, கனியை அங்கு வட்டமிடும் காட்சிப் போல, தந்திரமான பிரசாரத்தால் மயங்கிடும் மனப்பான்மை பொதுமக்களிடம் இருக்குமானால், மக்களாட்சிக் காலத்தில், சாதுர்யக்காரர்கள் சர்வாதிகாரமும் பெறமுடியும். சுதந்தரத்தைக் கேலிக் கூத்தாகிவிட முடியும். ஆகவேதான் இந்நாட்களிலே, மக்களின் சுதந்தர வாழ்வுக்குச், சிந்தனைத் தெளிவுதான் மிகவும் அடிப்படையாகத் தேவைப்படுகிறது.

ஆடு மாடுகளை விற்பதுபோல, மனிதர்களை அடிமைகளாக விற்றுவந்த கொடுமை நிரம்பிய காலத்தையும், சவுக்கு கொண்டு அடித்து, இரும்புச் சங்கிலிகொண்டு பிணைத்துத், தொழுவத்தில் கட்டிப்போட்டு அடைத்து வேலை வாங்கிவந்த, வேதனை நிரம்பிய காலத்தையும், இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்று ஆர்ப்பரித்த தூக்குமேடையைத் துரைத்தனத்தின் முதல் மந்திரியாகக் கொண்டு, கொடுங்கோலாட்சி புரிந்த மன்னர்கள், ரணகளச் சூரர்கள் காலத்தையும் கடந்து, மக்களாட்சி முறையெனும் இக்காலத்துக்கு வந்து சேருவதற்கு, நடாத்திய பயணம் மிக மிக நீண்டது. நெஞ்சுருக்கும் சம்பவங்கள் பலப் பல கொண்டது; மிக மிக சிரமமானது. இந்தப் பயணத்திலே மனிதன் சிந்திய இரத்தமும் கண்ணீரும் கொஞ்சமல்ல. பல சுடலைகளைக் கடந்து இந்த நிலைக்கு வந்தான், பல போராட்டங்-