2
படுத்துத் தூங்கி, பகலில் விழித்தபடி புரண்டுவிட்டு மாலை நேரத்திலே வெளியே சென்று வருவது ஓய்வு நேரம்—பொழுது போக்கு நோம்—வேடிக்கைகாகச் சொல்வார்கள்—ரயில் ஓடும்போது, போர்ட்டருக்கு ஓய்வு—ரயில் நின்று சில நிமிஷம் ஓய்வு கொள்கிறதே அப்போது போர்ட்டருக்கு வேலை—அது போல ஓய்வு நேரம்’ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரம்.
வேலை செய்து செய்து அலுத்து, இனி வேலை செய்யவே முடியாத நிலை ஏற்பட்டால், வேலை செய்யாமல் இருப்பதை, ‘ஓய்ந்து விட்டான்’ என்று கூறுகிறோம். அந்த நிலையல்ல ‘ஓய்வு நேரம்’ வேலை செய்கிறான்—இடையே வேலை ஏதும் செய்யாமலிருக்கிறான்,—அந்த வேளைதான் ‘ஓய்வு’. இந்த ஓய்வு நேரம்—ஓய்வின் தன்மை, இதைக்கொண்டுதான், அந்தச்சமூகத்தின் நிலைமையை மதிக்கிறார்கள் அறிவாளிகள். பொதுமக்களில் பெரும்பாலானவர்களுக்குக் கிடைக்கும் ‘ஓய்வு’ இருக்கிறதே, அதையே நாகரிகத்தின் அளவுகோலாகக் கொள்கிறார்கள் நல்லறிவாளர்கள்.
உழைத்துத்தான் வாழ வேண்டும்—வாழ்வு, உரிமை, உழைப்பு, கடமை.
ஆனால் உழைப்பு, உடலும் உள்ளமும் முறிந்துபோகாத அளவிலேயும் வகையிலேயும் இருக்கவேண்டும். வாழ்விற்கு வகை தேடுவதற்காகப் பாடுபடவேண்டும். ஆனால் படுகிறபாடு, உடல் வளத்தையும் உள்ள உற்சாகத்தை பாழ்படுத்திவிடுமானால், தொடர்ந்து பாடுபடும் திறன் பட்டுப்போய்விடும். வாழ்வின் சுகத்தை ருசிக்கும் திறனும் கெட்டுப்போய்விடும், உழைப்பு, உருக்குலைந்து விடக்கூடாது—உடலையும் சரி, உள்ளத்தையும் சரி, வாழ்விற்காக வசதி தேடுவதற்கு, உழைத்து, அந்த உழைப்பினாலே, உருக்குலைந்து போகும் நிலை மனிதனுக்கு ஏற்படுமானால் அவன், முட்டையிட்டதும் செத்துவிடும் கோழி, அரும்பு விட்டதும் பட்டுப்போகும் செடி போலப் பயன் காணாமலும் பயன் தாராமலும், போய்விடுகிறான்.
உழைப்பு, நம்முடைய உடலையும் உள்ளத்தையும் சிதைத்து விடவில்லை, வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கும் குடும்ப வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தக்க வருவாயைத் தருகிறது. இந்த வருவாயைப் பெறுவதற்காக உழைத்த நேரம் போக, மிச்ச நேரம் ஓய்வு கிடைக்கிறது, என்ற நிலைமை நாட்டு மக்களில் பெரும்பான்மையினருக்கு ஏற்பட்டால்தான், ஓய்வு நேரம், நமது சமூகத்திலே இன்றைய அமைப்பிலே, உழவர்கள், இயந்திரத் தொழிலாளர்கள், பல திறப்பட்ட தொழிலாளர்கள், பணிமனைகளிலே வேலை பார்ப்பவர்கள், என்று பல ‘தரம்’ இருக்கக் காண்கிறோம். யந்திரத் தொழிலாளர்களின் தொகை, மொத்த ஜனத்தொகையில் கால் பங்குக்கும் குறைவு. பாதிக்குமேல் உள்ள-