7
ஓய்வு துளியுமில்லையே, எப்போதும் உழைப்பு—என்ன சுகம் காண்கிறோம்—ஓய்வின்றி உழைக்கிறோம் என்று நெப்போலியன் மனம் நொந்துக் கொண்டானா? இல்லை.
களத்திலே கடும் போரிட்டபடி இருந்து வந்ததால் தூங்கவும் நேரம் கிடைக்காமல், ஒய்வு துளியுமின்றி இருந்து வந்த நெப்போலியனுடைய நிலையுடன் எல்பா தீவிலே, கைதியாக்கப்பட்டு, ஒரு வேலையுமின்றி, இருபத்திநான்கு மணிநேரமும் ஓய்வாக இருக்கும் வசதி பெற்ற நெப்போலியனுடைய நிலையை ஒப்பிட்டுப் பாருங்கள். களத்திலே ஓய்வு கிடையாது. ஆனால் அவன் கண்முன் வெற்றிக்கொடிகள். அவன் செவியில் வீர முழக்கம்—மண்டலங்கள் அவன் காலடியில் மணிமுடிகளைச் செண்டுகளாக்கி விளையாடிக் கொண்டிருந்த வீரன், ஓய்வின்றி இருந்தபோது. ஓய்வு நாள் முழுவதும் வேலை துளியும் கிடையாது—எல்பா தீவில்—ஆனால் அந்தக் கைதி நெப்போலியனுக்கு, அந்த ஓய்வு இனிப்பையா தந்திருக்கும். அந்த ஓய்வு, அவனுக்குப் பெருமையோ, பூரிப்போ தந்ததா—தருமா—பிணத்தின் மீது தூவப்படும் மல்லிகை தானே அந்த ஓய்வு?
நம் நாட்டிலே, பெரும்பாலான மக்களுக்கு, இப்படிப்பட்ட ஓய்வு கிடைக்கிறது. எல்பா தீவுக்குத் துரத்தப்பட்ட நெப்போலியன்கள் இங்கு ஏராளம்—வாழ்க்கைக் களத்திலே தோற்றுவிடுபவர்களெல்லாம், எல்பா தீவுக்குத் துரத்தப்பட்ட நெப்போலியன்கள், அவர்கள் பெற்றிருப்பது ஓய்வு அல்ல—அவர்கள் இன்னமும் வாழ்வே பெறவில்லை.
மாளிகையிலே ‘சோம்பேறிகள்’ இருந்தால்—கண்டனம் பிறக்காது,கொடுத்து வைத்தவர், அவருக்கு என்ன—நிம்மதியான வாழ்க்கை—என்று களிவுரை தரப்படும். அவர் மான் வளர்ப்பார் பொழுது போக்குக்கு—மீன் வளர்ப்பார் அழகுக்கு—ஓய்வு அவருக்கு ஓராயிரம் சேட்டைகள் செய்ய இடந்தரும். புகழ்வர். நாள் முழுவதும் பாடுபட்டு பிழைக்கவேண்டிய ஓயாத உழைப்பாளியின் நிலை வேறு. கடிாரகத்தைப் பார்த்து வேலை செய்துவிட்டு, காலண்டரைப் பார்த்துச் சம்பளம் வாங்கும் பேனா ஒட்டும் நண்பர்கள், கிடைக்கும் ஓய்வை திரட்டக்கூடிய வசதியைப் பயன்படுத்திக் கொண்டு அறிவானந்தமான செயலுக்குப் பொழுதுபோக்குக்குப் பயன்படுத்துகிறார்களா?
இயற்கை, தன் அழகை வாரி வீசுகிறது—கவனிப்பாரற்றுக் கிடக்கிறது—எழில்மிக்க விதவையைப்போல.
நீர் வீழ்ச்சி—சித்திரச்சோலை—ஆறு உற்பத்தியாகும் இடம்—மலை உச்சி—சந்தனக்காடு—சிந்து பாயும் சிற்றாறு—பறவை இனங்களின் பாட்டு மொழி—புள்ளிமான்கள் துள்ளியோடும் காட்சி யானைக்கன்றை அழைத்துச் செல்லும் கனவு, தேசிங்குக் கோட்டை சேர்வராயன் மலை பார்த்ததுண்டா, என்று கேளுங்கள் கோபம்