உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


கைத்தரம் உயருவதுடன் உதகமண்டலம், குற்றாலம், கொடைக்கானல் புதிது புதிதாக அமைக்க வேண்டும்—அதாவது ஓய்வு இடங்கள், பொழுது போக்குமிடங்கள் புதிது புதிதாக ஏற்படுத்த வேண்டும். அந்தந்த வட்டாரத்து மக்களின் பணக்கண்ணுக்குத் தெரியக் கூடிய தொலைவில். தமிழ் நாட்டிலே பல இடங்கள் இப்படி ஏற்பாடு செய்ய முடியும்—பொது முயற்சியால்—துரைத்தனத்தாரின் திட்டத்தால்.

ஓய்வு நேரம்—மேலே வானத்திலே நிலவு, நட்சத்திரம்—காண்கிறோம். களிப்புத்தான்—ஆனால் எவ்வளவு நேரம் காண முடியும். அந்த ஊர் நகராட்சி மன்றத்தாரோ, பொதுநலக் கழகத்தாரோ, ஒரு அருமையான டெலஸ்கோப், தொலைவில் உள்ளத்தைத் தெளிவாகக் காட்டும் கருவியை— டெலஸ்கோப்பை, தக்க முறையிலமைத்து பொழுது போக்குபவர்கள். காண வரலாம் என்று ஒரு ஏற்பாடு இருந்தால், விண்ணைக்கண்டு களிப்பது, எவ்வளவு சுவையான பொழுது போக்காக மாறும், நம்மையும் அறியாமல், எவ்வளவு பயனுள்ள அறிவும் நமது உள்ளத்திலே குடி ஏறும். பொழுது போக்கு, வீணாகவும் கூடாது விவேக சிந்தாமணி பாடம் படிக்கும் பள்ளிக்கூடமுமாகி விடக்கூடாது—சிரமமோ, சிக்கலோ இன்றி நமக்கு, அறிவானந்தம் தருவதாய் அமையவேண்டும். பொதுமக்கள் மனதிலே கலைப்பண்பு ஊற்றெடுக்கும் வகையான பொழுது போக்குகள், திட்டமிட்டு, மிகமிகக் குறைந்த செலவிலே ஏற்படுத்தலாம் நகராட்சியினர். கண்காட்சிகள் இவ்விதமான முயற்சிகளிலே ஒன்று—முயற்சி என்று மட்டுமே கூறமுடியும்—வெற்றி அல்ல— ஏனெனில் பெரும்பாலான அக்காட்சிகள் கடை வீதிகளாகவே காட்சி தருகின்றன. பயன் இல்லை—சில அக்காட்சிகளிலே, மிருக உணர்ச்சியும், சூதாட்ட உணர்ச்சியும் தூண்டும் முறைகளில் உள்ளன—தீமையே உண்டாகிறது. ஆனால் கண்காட்சி, பொழுது போக்குக்கு அரிய சாதனம்— அறிவானந்தம் பெறமுடியும்.

உலகத்தைத் திடுக்கிடச் செய்த மாவீரன் நெப்போலியனைப் பற்றிப் பெருமையாகப் பேசும்போது சொல்லுவார்கள் தூங்கவும் நேரம் கிடையாது—களத்திலே, எங்கேனும் ஓர் இடத்திலே, குதிரை மீது அமர்ந்தபடியே கண் மூடிச் சில நிமிஷ நேரம் தூங்குவான்—அவ்வளவுதான் முடியும்—நெப்போலியனுக்கு அவ்வளவு வேலை? ஓயாத உழைப்பு—என்று பெருமையாகக் கூறுவார்கள்.

உண்மைதான் தூங்கவும் நேரமின்றித்தான் போரில் ஈடுபட்டிருந்தான் அந்த மாவீரன். ஆனால் ஓய்வு கிடைக்கவில்லையே, அழகான அருவியிலே குளித்துவிட்டுச் சிங்காரச் சோலையிலே உலவி வேல்விழிமாது பாடிடும் தேன்மொழி சிந்துக் கேட்டுக் களித்திட, நமக்கு ஓய்வில்லையே என்ன தொல்லையான வாழ்க்கை இது,