நாடகத்திலே மறுமலர்ச்சி
சி. என். அண்ணாத்துரை
நாட்டிலே இதுபோது பல்வேறு துறைகளிலேயும் மறுமலர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. புதியதோர் நிலைக்கு நாடு, தள்ளாடித் தள்ளாடி, ஆனால் நிச்சயமாகச் சென்று கொண்டிருக்கிறது. புதிய நிலையை அடைந்தால், நம் நாடு, உலகிலே முன்னணியில் உள்ள நாடுகளிலே ஒன்றாக முடியும் என்ற நம்பிக்கைக் கொண்டவர்கள், இந்தத் திருப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இன்று, எந்தத் துறையைக் கவனித்தாலும், குமுறலும் கொந்தளிப்பும் தெரிகிறது—அச்சம் சிலருக்கு, சந்தேகம் பலருக்கு, மிக மிகச் சிறுபான்மையினருக்கு மட்டுமே தெரிகிறது. புதிதாக ஓர் நிலை, நாட்டுக்கு உருவாகிக்கொண்டு வருகிறது உண்மை. வெடித்துக் கிடக்கும் வயல், படர்ந்து போகும் நிலையில் உள்ள விளக்கு, பட்டுக்கொண்டே வரும் நிலையில் உள்ள மரம், உலர்ந்துகொண்டு வரும் கொடி, வற்றிக் கொண்டிருக்கும் குளம்—இவைபோல, சமுதாயத்தில் நிலையும் நினைப்பும் நடவடிக்கையும் ஆகி விடும்போது, இந்த அவல நிலையைப் போக்கியாக வேண்டும் என்ற ஆர்வமும் போக்க முடியும் என்ற நம்பிக்கையும், போக்கக்கூடிய அறிவாற்றலுங் கொண்ட ஒரு சிலர் முன் வருகிறார்கள். அறிவுப்பண்ணைக்குப் பணியாற்ற அவர்களை நாடு வரவேற்பதில்லை—நையாண்டி செய்யும்! மதிப்பளிப்பதில்லை—மாச்சரியத்தை வாரி வீசும் துணை புரிவதில்லை; தொல்லை தரும்! எனினும், அந்த ஒரு சிலர் ஓயாது உழைத்து, சலிப்பு, கோபம், வெறுப்பு, பகை என்னும் உணர்ச்சிகளுக்குப் பலியாகி விடாமல், புன்னகையும் பெருமூச்சும் கலந்த நிலையில் பணி புரிந்து, பட்ட மரம் துளிர் விடும் வரை, படர்ந்து போக இருந்த விளக்கு மீண்டும் ஒளி விடும்வரையில் பாடு பட்டு, வெற்றி கண்டு, மறுமலர்ச்சியை உண்டாக்கி வைக்கிறார்கள்.
உள்ளது சரியில்லை, போதுமானதாக இல்லை, அல்லது பயனில்லை, என்று தோன்றும்போது, உள்ளதைத் திருத்துகிறோம், புதுப்பிக்கிறோம், பயனுள்ளதாக்குகிறோம். இந்த சமுதா-