உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3


டுமே முடியும். நாடகத்திலேயோ, கருத்துரையைக் கேட்பதுடன், கருத்து விளக்கக் காட்சிகளைக் காணவும் முடிகிறது. எனவே, நாடக மூலம், மனதை அதிகமான அளவுக்கு வசப்படுத்த முடிகிறது. நல்ல நடிகன், நாடகத்தைக் காண்பவர்களிடம், தான் விரும்பும் உணர்ச்சியை அந்த நேரத்திலே ஊட்டி விட முடிகிறது மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பிகள் போல நல்ல நடிகனின் திறமை நாடகத்தைக் காண்பர்களை உணர்ச்சி வயத்தவராக்கி விடுகிறது எனவே, நாடகத் துறைக்கு உள்ள, வசப்படுத்தும் சக்தி அதிகம். அதிலும், சராசரி அறிவுள்ளவர்களுக்கும், அதாவது இயலை அறியவும் இசையை நுகரவும் தேவைப்படும் அளவுக்கும் குறைந்த அளவு அறிவு படைத்த சராசரி மனிதருக்கும், நாடகம் புரியும்; கருத்துக்களைப் புரிய வைக்கும்; உணர்ச்சிகளைத் தூண்டிவிடும்; செயலுக்கும் தயாராக்கி வைக்கும். அவ்வளவு திறமை கொண்டது நாடகத் துறை.

அறிவு வளர, ஆர்வம் பிறக்க, மகிழ்ச்சி தோன்ற, மக்களை நன்னெறியிலே புகவைக்க, நற்பண்புகள் உள்ளத்திலே குடிபுக—இப்படிப்பட்ட நற்காரியங்களுக்கு, முத்தமிழ் அதிலும் முக்கியமாக நாடகம், பயன்படல்வேண்டும் என்பது, அடிப்படை உண்மை இதைக் காலம் மாற்றாது. மாற்றினால், சீர்கேடுதான் விளைவு—எனவே, இந்த அடிப்படை உண்மைகளை அல்ல, மறுமலர்ச்சி இயக்கம் கூடாது உன்று கூறுவது. மறுமலர்ச்சி என்பது, மாண்புகளை மாய்த்திடும் நஞ்சு அல்ல—மாண்புகளை மாய்க்கும் நச்சுப் பூச்சிகளை அழித்திடும் முறை!

அறிவு வளர்ச்சிக்கு நாடகம் பயன்படவேண்டும். இதை மறுமலர்ச்சி இயக்கம் மறுக்கவில்லை— அறிவு வளரவேண்டும் என்பது சரி—ஆனால் எத்தகைய அறிவு? என்ற கேள்வியைக் கேட்கிறது, மறுமலர்ச்சி இயக்கம்! லோகம் மாயை, காயம் என்பது அநித்தியம்—இது ஒருவித அறிவுதான்! சேலை கட்டிய மாதரை நம்பாதே!—இதுகூட ஒருவகையான அறிவுதான் பெண்டு பிள்ளைகளும் இரவல்; உனைப் பெற்றெடுத்த தாய்மாரும் இரவல்! இதுவும் அறிவிலே ஒரு வகை தான்! நாடக மேடை மூலம் எத்தகைய அறிவு பெறுவது! கீழே ஏழு மேலே ஏழு, எனப் பதினான்கு லோகங்கள் கொண்டது பழங்கால பூகோள அறிவு! இதையா, நாடகம் தரவேண்டும், அட்லாஸ் பிரசுரமான பிறகும்! தேரை ஒட்டிக்கொண்டு வரும் சூரிய பகவானையா நாடக மேடையில் காண்பது, விஞ்ஞான வகுப்பிலே, சூரியனைப் பற்றிய பாடம் கேட்ட பிறகும். அறிவு தேவைதான்! அறிவு வளரச் செய்வது நாடக நோக்கத்திலே ஒன்றுதான்—மறுமலர்ச்சி இயக்கத்தினர் இதை மறக்கவில்லை. ஆனால், நாடகத்தை அறிவு வளர்ச்சிக்குப்