7
போக்கக் கூடியதாகவோ இல்லை. இப்போது, தன்னைப் போன்ற மனிதன், எந்தெந்தச் சூழ் நிலையில் எப்படி எப்படி ஆகிறான், என்னென்ன செய்கிறான், எதை எதை எண்ணுகிறான் என்று காண விரும்புகிறார்கள்.
எலும்பைப் பெண்ணுருவாகக் கண்ட கண்கள், இப்போது பெண் எலும்புரு ஆகும் அளவுக்குக் குடும்பத்திலே ஏற்படும் கொடுமைகளைக் காண விரும்புகின்றனர்! கண் இழந்தவனைக் காண விரும்புகிறார்கள், நண்பனுக்காக, குடும்பத்துக்காக, நாட்டுக்காக வறுமையால், கொடியவர் செயலால், இப்படி ஏதேனும் ஒன்றினால் கண்ணிழந்தவன் இருக்கிறானே அவனுடைய கதையைக் காண விரும்புகிறார்கள். உழைத்து உருக்குலைபவன் உழைக்காமல் வாழும் வழி கற்றவன், மேட்டுக்குடி வாழ்வு, காட்டு ராஜா, முறை, வேட்டையாடப்படும் மனிதன், விருப்பம் வெதும்பியதால் நொந்து போனவன், வாழ்க்கை வெற்றிக்காக எதையும் செய்பவன், இப்படிப் பலரைக் காண விரும்புகிறார்கள். தந்தை மகன் உறவு, அண்ணன் தம்பி உறவு இந்த உறவுக்கு வரும் ஊறுகள், அதற்கான காரணங்கள் இவைகளைக் காண விரும்புகிறார்கள். ஒருவன் ஏன் நல்லவனாக இருந்தவன் கெட்டவனாகிவிடுகிறான், என்ற சூழ்நிலை விளக்கத்தைக் காண விரும்புகிறார்கள். இவற்றுடன், எல்லோரும் இன்புற்று வாழ, ஒருவரை ஒருவர் சுரண்டாமல் வாழ, மனிதன் மிருகமாகாமலிருக்க, என்ன வழி என்பதை அறிய விரும்புகிறார்கள்!
இந்தச் சமுதாயம், கலனான கட்டடம் என்பதை மறுப்பவர் இல்லை புதுப்பிக்க வேண்டும் என்று பேசாத அறிவாளர்கள் இல்லை எனினும், சமுதாய நிலைமைகளை, ஜாதி உயர்வு தாழ்வுகளை, அதனால் விளையும் விபரீதங்களை விளக்கும் நாடகங்களை, ஜாதித் துவேஷ, வகுப்புத் துவேஷ மூட்டுகின்றன என்று கூறி ஒரு மூட நம்பிக்கையினால் விளையும் கேடுகளையும், புரட்டர்களால் பாமரர் அடையும் அவதிகளையும் விளக்கி, புத்தறிவு பரப்புவதற்காக நாடகங்கள் நடத்தினால் அவை மூலம் நாத்தீகம் பரவுகிறது என்று சொல்லவும், பயங்கரமான பொருளாதார பேதத்தால், சமுதாய அடிப்படையிலே பிளவு ஏற்படுகிறது, வாழ்வு என்பது அனைவருக்கும் உள்ள உரிமை. இதைப் பறிக்கும் முறையில் உள்ள அமைப்புக்கள் அழிக்கப்பட வேண்டியன என்பதை விளக்கும் நாடகம் நடத்தினால், இது போது உடைமைப் பூதத்துக்குச் செய்யும் பூஜை என்று கூறவும், இந்த நாட்டிலே, இந்த நாளிலே சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் மூலம், நாடகத்துறை மறுமலர்ச்சிக்குக், குந்தகம் ஏற்படுகிறது.