பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வஞ்ச மகள் செயல்

97

வேண்டியதுதான். அதை நினைத்தபோது சேரனுக்கு வயிற்றை என்னவோ செய்தது. இனித் தான் சோர்வாகப் பேசக்கூடாது என்று கருதினான்.“என்ன அப்படிச் சொல்கிறீர்? எனக்கே அதிகமானை அடக்க வேண்டுமென்று நெடு நாட்களாக ஆவல் இருந்தது. உமக்கு வந்த இழிவு எனக்கு இல்லையா? அதிகமானே எதிர்ப்பதற்கு ஏற்ற செவ்வி வரவேண்டுமென்று காத்திருந்தேன். நீர் வந்து அந்தச்செவ்வியை உண்டாக்கினீர். நமக்குச் சரியானபடி போர் வாய்த்தால் விடலாமா? கையில் வலிமை இருந்தும் அதைப் பயன்படுத்த வகையில்லாமல் இருக்கிறதே என்றுதான் சொல்ல வந்தேன். நீர் சோர்வடைய வேண்டாம். ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கக் கூடாதா? இன்னும் எவ்வளவு காலமானாலும் காத்திருப்போம். நமக்கு என்ன? உணவுப் பஞ்சமா? உடைப் பஞ்சமா? வஞ்சிமா நகரிலிருந்து உணவுப் பொருள் வந்து கொண்டிருக்கிறது” என்று கூறுகையில் அவனுடைய குரல் மாறியிருந்தது; ஊக்கமும் ஆறுதலும் ஊட்டும் வகையில் அவன் பேசினான்.

இப்படி இரண்டு மூன்று நாட்கள் சென்றன. படைத் தலைவர்களில் யாரேனும் ஒருவர் புறத்தே கோட்டையைச் சூழ வருவதும், அரசனும் மற்றத் தலைவர்களும் பாசறையிலேயே இருப்பதுமாக இருந்தார்கள். அன்று அரசனே கவசத்தைப் பூண்டு தன் குதிரையின்மேல் ஏறிப் புறப்பட்டான். மாலை கவிந்து வந்தது.

அந்தச் சமயத்தில் ஒரு பெண் தன்னுடைய உடம்பையெல்லாம் வெள்ளை ஆடையால் மூடிக் கொண்டு பாசறைக்கு அருகில் வந்தாள். படை வீரர்கள் அவளைக் கண்டவுடன் யாரோ ஒற்றாக வந்திருக்கிறார் என்ற எண்ணத்தால் அவளைப் பற்றிக் கொண்டு விரட்டினார்கள்; “நீ எங்கே வந்தாய்? உண்