பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

அதிகமான் நெடுமான் அஞ்சி


வீறுடன் போரைத் தொடங்கிவிட்டார்கள் இரு சாராரும். யானைகளும் யானைகளும் மோதின. குதிரைகளும் குதிரைகளும் முட்டின. தேர்ப் படையும் தேர்ப் படையும் பொருதன. வீரர்கள் வில்லும் வாளும் ஏந்திப் போர் செய்தனர். அதிகமானுடைய அணிவகுப்பும் சேரமானுடைய படை வகுப்பும் பார்வைக்கு ஒரே அளவை உடையனவாகவே தோன்றின. முழையிலிருந்து யானையின்மேல் தாவும் சிங்கத்தைப் போல அதிகமான் வீரர்கள் பாய்ந்தனர். அயல் நாட்டில் சென்று போர் செய்வதைக் காட்டிலும் தமக்குரிய இடத்திலிருந்து போர் புரிவது ஊக்கத்தை மிகுதியாக்கும்; எளிதாகவும் இருக்கும். அந்த நிலையில் இருந்தமையின் அதிகமான் படைக்குக் கிளர்ச்சி மிகுதியாக இருந்தது. இதுவரையிலும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தவர்களெல்லாம் விழித்தெழுந்து தோள்கொட்டி ஆர்த்தனர்.

மலைநாட்டுப் படையின் முன்னணியில் இருந்த பகுதிக்கு நெடுங்கேரளன் தலைமை தாங்கினான். அதிகமான் படையில் பெரும்பாக்கன் முன்படையை நடத்திப் பொருதான். பெரும்பாக்கன் பெரு வீரன்; அதிகமானால் சிறப்புப் பெற்றவன். அவனுக்குமுன் நிற்க நெடுங்கேரளனுக்குத் திறமை போதாது. முதல் நாள் போரில் யாரும் விழவில்லை. அடுத்த நாள் நெடுங்கேரளன் பெரும்பாக்கனுடைய அம்புக்கு இரையானான்.[1] முதல் வெற்றி அதிகமானுக்கே கிடைத்தது. அவன் கட்சியில் இருந்த படை வீரர்கள் பெரு முழக்கம் செய்து ஆரவாரித்தார்கள்.

சேரமான் இளமையையுடையஒருவீரத்தலைமகனை இழந்தது பற்றி மிகவும் வருந்தினான். “இனி நாம் சோர்வடையாமல் போரிட வேண்டும். இதுவரையில் போர் செய்ய வகையின்றிச் சும்மா கிடந்தோம். இப்


  1. 1. தகடூர் யாத்திரை (தொல். புறத் 24, உரை.)