பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடிவு

119

அதிகமான் புகழை நன்றாக அறிந்தவர் அவர். புலவர்களில் அவனைத் தெரியாதவர் யார்? பெரிய மன்னனை இத்தனை காலம் அலைக்கழித்து, போர் எப்படி முடியுமோ என்று அஞ்சச் செய்து எதிர்த்து நின்ற அவன் வீரத்தைப் பகைப் படைத் தலைவர்கள் நன்கு அறிந்தார்கள். அவர்கள் வாயிலாக அவனுடைய வீரத்தை அறிந்தவர் அரிசில்கிழார். அவர் இரங்கினார். பிறகு அவனைப்பற்றி ஒரு பாட்டுப் பாடினார். அவனைப்பற்றி அறிந்தவற்றையெல்லாம் அந்தப் பாடலில் அமைத்திருந்தார்.

“அதிகமானுடைய நாட்டில் யாருக்கும் எதனாலும் அச்சமே இல்லாமல் இருந்தது. காடுகளில் மாட்டு மந்தைகள் கன்றுகளோடு தங்கும். யாரும் அவற்றை அடித்துச் செல்லமாட்டார்கள். கவலையில்லாமல் அவை புல்லைத் தின்று இன்புறும். நெடு வழியிலே போகும் அயலூரார் எங்கே வேண்டுமானாலும் தங்கலாம். வழிப்பறிக்காரர்கள் வருவார்களோ என்று சிறிதும் அஞ்ச வேண்டுவதில்லை. நெற்களங்களில் நெல் குவியல் குவியலாகக் காவலே இல்லாமல் போட்டது போட்ட படியே கிடக்கும் ; ஒரு துரும்புகூடக் களவு போகாது. மக்களுக்குப் பகைவரே யாரும் இல்லை. இப்படித் தன் நாட்டில் அமைதியும் நற்பண்பும் நிலவும்படி செங்கோலோச்சினான் அதிகமான். உலகமே அவனைப் புகழ்கிறது. வீரத்தில் குறைந்தவனா? அவன் வாள் தன் குறியிலே சிறிதும் தப்பாது. இத்தகைய குரிசில் இப்போது களத்தில் கிடக்கிறான். தாயைப் பிரிந்த குழந்தையைப்போலச் சுற்றத்தார் மூலைக்கு மூலை வருந்திப் புலம்ப, அவனைக் காணாமல் இனிப் பசி வந்து வருத்துமே என்று அஞ்சும் மக்கட் கூட்டம் புலம்பும். அப்படித் துன்புற்று வைகும் உலகம் இழந்ததைவிட, அறம் இல்லாத கூற்றுவனே, நீ இழந்தது தான் மிகப் பெரிது. விதைத்துப் பயிரிட்டு விளைவு