பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

அதிகமான் நெடுமான் அஞ்சி

செய்யும் வயலின் பெருமையை அறியாமல் வீழுங்குடியை உடைய உழவன் விதை நெல்லையே சமைத்து உண்டதுபோல நீ செய்து விட்டாயே! இந்த ஒருவனுடைய ஆருயிரை நீ உண்ணாமல் இருந்திருந்தாயானால் அவன் அமர் செய்யும் களத்தில் அவன் கொன்று குவிக்கும் பகைவர்களுடைய உயிரைப் பருகி நிறைவு பெற்றிருப்பாயே![1] என்ற பொருளை அப் பாட்டுப் புலப்படுத்தியது.

பிறர் துயர் கூர்ந்து இனைய இனைய ஔவையாரின் உள்ளம் அதிகமானோடு பழகிய நாட்களெல்லாம் அவருடைய நினைவுக்கு வநதன.

“அவனுடைய ஈகையை என்னவென்று சொல்வேன்! சிறிதளவு பானம் பெற்றால், தான் அருந்தாமல் எங்களுக்குக் கொடுத்துவிடுவான். நிறையக் கிடைத்தால் யாம் பாடும்படி எல்லாரோடும் அருந்தி இன்புறுவான். சிற்றுண்டி உண்டாலும் உடன் இருக்கும் பலருக்கும் இலை போட்டு அவர்களோடு உண்பான். பெரிய விருந்தானாலும் எல்லோரையும் உண்பித்துத் தான் உண்பான். சுவையான உணவு கிடைக்கும் இடங்களிலெல்லாம் எங்களை இருக்கச் செய்வான். அம்பும் வேலும் நுழையும் இடங்களிலெல்லாம் தான் வந்து முன்னே நிற்பான். எவ்வளவு அன்பாக எங்கள் தலையைக்கோதி மகிழ்வான்! அவனுடைய மார்பிலே புகுந்து தங்கிய வேல் அவன் மார்பையா துளைத்தது? அருமையான சிறப்பைப் பெற்ற பெரிய பாணருடைய கைப் பாத்திரங்களைத் துளைத்தது; இரப்பவர் கைகளைத் துளைத்துவிட்டது; அவனால் காப்பாற்றப்பட்டவர்களுடைய கண் ஒளியை மழுங்கச் செய்தது; கடைசியில், அழகிய சொற்களையும் நுட்பமான ஆராய்ச்சியையும் உடைய புலவர்களுடைய நாவிலே போய்க் குத்தி விழுந்தது. என் அப்பன் இப்போது எங்கே


  1. 1. புறநானூறு, 230.