பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

 அதிகமான் நெடுமான் அஞ்சி

உயர்ந்த கொடுமுடிகளையுடைய மலை பொருந்திய நாட்டை நீ கொள்க என்று கொடுத்தாலும் வாங்க இசையாத அந்தப் பெருவள்ளல் இந்தச் சிறிய கலத்தில் உகுக்கும் கள்ளைக் கொள்வானா? இதைப்பார்க்கும் படியாக நேர்ந்த எனக்குக் காலையும் மாலையும் இல்லையாகட்டும்; வாழும் நாளும் இல்லாமற் போகட்டும்![1] என்று விம்மினார்.

வீரத்தாலும் ஈகையாலும் பண்பினாலும் ஓங்கி உயர்ந்த ஒரு பெரிய வள்ளலின் வாழ்க்கை, ஒரு சிறந்த வீரனின் நாள், ஓர் இணையற்ற கருணையாளனது கதை முடிந்தது. அவனுடைய புகழைத் தமிழுலகம் மறக்கவில்லை; ஏழு வள்ளல்களில் ஒருவனாக வைத்துப் பாராட்டுகிறது.

அதிகமானுக்குப் பிறகு ஆவன் மகன் பொகுட்டெழினி தகடூரை ஆண்டான். கொல்லிக் கூற்றத்தைச் சேரமான் தகடூர்ப் போரில் பெருவிறலோடு நின்று போரிட்ட பிட்டங் கொற்றனுக்கு உரிமையாக்கினான். திருக்கோவலூரை மீண்டும் காரிக்கே வழங்கினான்.

சில காலம் ஔவையார் பொகுட்டெழினியுடன் இருந்து, பிறகு புறப்பட்டு விட்டார். அதிகமான் இல்லாத இடத்தில் தங்கி வாழ அவர் மனம் இடம் கொடுக்கவில்லை.

அதிகமானுடைய பரம்பரையில் வந்தவர்கள் பிற்காலத்தில் சில திருக்கோயில்களில் திருப்பணி செய்ததாகத் தெரிகிறது. கொங்கு நாட்டில் உள்ள நாமக்கல் என்னும் ஊரில் ஒரு சிறு குன்றம் இருக்கிறது. அங்கே உள்ள திருமால் கோயிலுக்கு அதியரைய விண்ணகரம் என்று பெயர். அதை அதியேந்திர விஷ்ணுக்கிருகம் என்று வடமொழியில் வழங்குவர். அதனை நிறுவியவர் அதிகமான் பரம்பரையில் வந்தவரென்றே தெரிகிறது. அப்பர் அடிகள் திருவருள்


  1. 1. புறநானூறு, 232.