பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடிவு

123

பெற்ற திருத்தலம் திருவதிகை என்பது. அதிகை என்பது அதியரைய மங்கை என்பதன் மரூஉ. தஞ்சாவூர் தஞ்சை என்று வருவது போன்றது அது. அந்தத் தலமும் அதிகமான் வழிவந்த மன்னர் ஒருவரால் அமைக்கப் பெற்றது போலும். பதின்மூன்றாவது நூற்றாண்டில் அதிகமான் மரபில் வந்த விடுகாதழகிய பெருமாள் என்பவன் ஒரு மலையின்மேல் அருகக் கடவுள் திருவுருவை நிறுவினானென்று ஒரு கல் வெட்டிலிருந்து தெரிய வருகிறது.

இன்று தகடூராகிய தருமபுரி தன் பெயரை இழந்து நின்றாலும் அதிகமான் கோட்டை இருந்த இடம் மேடாக இருக்கிறது. அங்கே அதிகமான் கோட்டை என்ற பெயரோடு ஓர் ஊர் உள்ளது. அங்கே ஓரிடத்தில் சாலையின் ஓரத்தில் ஒரு சிலையுருவம் நிற்கிறது. அதைக் கோட்டைக்குள்ளே புகும் கருங்கையைச் சேரமானுக்குக் காட்டிக் கொடுத்த வஞ்ச மகளுடைய உருவம் என்று அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள்.

அதிகமான் ஔவையாரிடம் கொண்ட அன்பு பாசமாக மாறியது. அவ்விருவரும் தம்பி தமக்கைகளைப் போலப் பழகினர். அதனால் பிற்காலத்தில் அவர்கள் ஒரு தாய் வயிற்றிலே பிறந்தவர்கள் என்று கூடச் சிலர் பாடி விட்டார்கள்.

அதிகமான் வரலாறு ஒரு வீர காவியம்; புலவர்கள் போற்றும் புனிதக் கதை.



கட்டுரைப் பயிற்சி

கீழ்க்காணும் பொருள்கள் பற்றி ஒன்றரைப் பக்க அளவில் கட்டுரைகள் வரைக.

1. அதியர் குல முன்னோர்கள்.

2. அதிகமான் ஆண்மையும் ஆட்சியும்.