பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

அதிகமான் நெடுமான் அஞ்சி

யில்லாமல் உள்ளே வந்துவிட்டார். அதிகமான் அவரை அமரச் சொல்லி நன்னீர் பருகச் செய்தான். இந்தக் கடுமையான வெயிலில் வந்தீர்களே!” என்றான்.

“ஆம், கடுமையான வெயில்தான். ஆனால் என்ன? இங்கே வந்தால் குளிர்ந்த சொல்லும் குளிர்ந்த நீரும் குளிர்ந்த அன்பும் கிடைக்கின்றன” என்று சொன்னவர், அங்கே தட்டை ஏந்தி நின்ற மங்கையைப் பார்த்தார். அந்தத் தட்டில் இருந்த நெல்லிக்கனி அவர் கண்ணில் பட்டது, “அது நெல்லிக் கனியா? வரும் வழியில் நாக்கு ஒரே வறட்சியாகி விட்டது. எங்கேயாவது நெல்லிக்காய் கிடைத்தால் உண்டு நீர் வேட்கையைப் போக்கிக் கொள்ளலாம் என்று பார்த்தேன். ஒரு நெல்வி மரங்கூட என் கண்ணில் அகப்படவில்லை” என்றார்.

அதிகமான் உடனே சிறிதும் யோசியாமல், “இந்தாருங்கள்; இதை உண்ணுங்கள்” என்று சொல்லி அதை எடுத்து அவர் கையில் கொடுத்தான். அந்தப் புலவர் பெருமாட்டியார் அதை வாங்கி வாயில் போட்டு மென்றார், அதுவரையில் அவர் உண்ட நெல்லிக் கனிகளைப் போல இருக்கவில்லை அது. தனியான இன்சுவை உடையதாக இருந்தது. “இது என்ன, அதிசயக் கனியாக இருக்கிறதே! இத்தகைய சுவையையுடைய கனியை நான்கண்டதே இல்லையே!” என்று வியந்தார் அவர்.

அங்கே இருந்த சில முதியவர்களும் பிறரும் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கலக்கமும் கோபமும் கொண்டார்கள். ‘இந்தச் சமயத்தில் இந்தக் கிழம் இங்கே எங்கே வந்தது?’ என்று சில்ர் பொருமினார்கள். ‘இந்த அரசர் உண்மையைச் சொல்லக் கூடாதோ? திடீரென்று எடுத்துக் கொடுத்து விட்டாரே!’ என்று சிணுங்கினர் சிலர். ‘இதுதான் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்று சொல்வதோ!’