பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமுதக் கனி

27

உலகத்தில் எங்கும் பெறுவதற்கு அரியதும், உண்டாரை மூப்பு வாராமல் நீண்ட நாள் வாழச்செய்வதுமாகிய நெல்லிக் கனியைத் தன் நலம் பாராமல் ஔவையாருக்கு ஈந்த அரும்பெருஞ் செயல் காரணமாகவே அந்தப் பெருமை அவனுக்குக் கிடைத்தது.

அதிகமான் காலத்துக்குப் பிறகு வாழ்ந்த நல்லூர் நத்தத்தனார் என்ற புலவர் எழு பெருவள்ளல்களைச் சேர்த்துச் சிறுபாணாற்றுப்படை என்ற நூலில் சொல்லியிருக்கிறார். அங்கே அதிகமானைச் சொல்லும்பொழுது.

......மால்வரைக்
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்துவினை தீங்கனி ஔவைக்கு ஈந்த
உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக் கடல்தானை அதிகன்[1]

என்று பாடியிருக்கிறார். அதில் இந்த வியத்தகு செயலைக் குறிப்பிட்டிருக்கிறார். இப்படியே, அதிகமானுடைய பலவகைச் சிறப்புக்களில் இந்த வண்மைச் செயலே சிறப்பாகப் புலப்படும்படி புலவர்கள் அவன் காலத்தும் பிற்காலத்தும் பல பாடல்களைப் பாடினார்கள்.

சாவாமல் செய்யும் நெல்லிக்கனியை அவன் உண்ணாமல் வழங்கிவிட்டாலும், அந்த இணையற்ற ஈகையே அதிகமானே இறவாமல் தமிழ் இலக்கிய உலகத்திலும் சான்றோர்கள் உள்ளத்திலும் நிலவும்படி செய்துவிட்டது.


  1. பெரிய மலையின் மணக்கின்ற மலர்களையுடைய பக்கத்திலே, வளர்ந்து அழகு பெற்ற நெல்லி மரத்தில், சுவையாலும் சாவை நீக்குவதாலும் அமிழ்தத்தின் தன்மை விளைந்த இனிய கனியை ஔவையாருக்குத் தந்த, வலிமையையுடைய சினம் கனலுகின்ற ஒளி விளங்கும் நீண்ட வேலையும், ஆரவாரம் செய்யும் கடலைப்போலப் பரந்த சேனையையும் உடைய அதிகமான். மால்வரை-பெரிய மலை. கவினிய-அழகுபெற்ற. உரவு-வலிமை, அரவம்-ஆரவாரம்; பேரோசை, தானை-சேனை.