பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படர்ந்த புகழ்

29

புதிய புதிய தமிழ்ச் சுவையையும் அறிவையும் தனக்கு ஊட்டுவதாக எண்ணினான் அதிகமான். அதனால் அவர்கள் எப்போது வந்தாலும் தலைநாளில் காட்டிய அன்பிலே சிறிதும் குறைவின்றிக் காட்டி வந்தான்.

“நவில்தொறும் நூல்நயம் போலும், பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு” [1]

என்பதை நன்கு உணர்ந்தவனாகி ஒழுகினான் அப்பெரு வள்ளல்.

அதிகமானைக் கண்டு பரிசிலைப் பெற்று உடனே தம் ஊரை அடைய வேண்டும் என்று சில புலவர்கள் வருவார்கள். அதிகமானோ அவர்களை எளிதில் விடமாட்டான்; சில காலம் தங்கிப் போகவேண்டும் என்று வற்புறுத்துவான். தமக்கு நாள்தோறும் உபசாரமும் இனிய விருந்தும் கிடைக்க, அரச குமரரைப்போல அவர்கள் இன்புற்றுத் தங்கினாலும், அவர்களுடைய உள்ளம் தாம் விட்டு வந்த வீட்டைச் சிலகால் நினைக்கும். தம் மனைவி மக்கள் அங்கே போதிய உணவில்லாமல் துன்புறுவதை எண்ணித் தனியே அவர்கள் பெரு மூச்சுவிடுவார்கள். ‘பரிசில்கிடைக்குமோ கிடைக்காதோ! இப்படியே விருந்துண்ணச் செய்துவிட்டுப் போய் வாருங்கள் என்று சொல்லிவிட்டால் என் செய்வது?’ என்று கூடச் சிலர் தம் மனத்துக்குள்ளே வருந்துவதுண்டு.அவர்களுக்கு அதிகமானது இயல்பை வெளிப்படுத்துவதுபோலப் பாடலை அமைத்தார் ஔவையார். அதிகமான் வழங்கும் பரிசிலைப் பெறுவதற்குரிய காலம் நீண்டாலும், நீளாவிட்டாலும் அது உறுதியாகக் கிடைக்கும். யானை கரும்பை வாங்கித் தன் கொம்புகளினிடையே வைத்துக் கொள்கிறது. அடுத்த கணம் அதை வாய்க்குள் செலுத்துகிறது. கொம்பிலே வைத்தது எப்படி அந்த யானைக்கு உணவாவது நிச்சயமோ,


  1. திருக்குறள், 788.


அதிக-3