பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

அதிகமான் நெடுமான் அஞ்சி

அதுபோல அதிகமானை அணுகினவர்கள் பரிசில் பெறுவதும் நிச்சயம். இங்கே வந்தவர்களுக்கு அவன் தரும் கொடைப் பொருள் அவர்கள் கையில் இருப்பது போன்றதுதான். ஆகவே, அவன் தரும் பொருளை நுகரவேண்டுமென்று ஆவலுடன் உள்ள நெஞ்சமே, நீ வருந்தாதே! அவனுடைய நன் முயற்சிகள் ஓங்கி வாழட்டும்!” என்று தமக்குத்தாமே சொல்லிக் கொள்ளும் வகையில் அந்தச் செய்யுளைப் பாடினார்.

அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
அதியமான் பரிசில் பெறூஉம் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும், யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் தது; அது பொய்யா காதே;
அருந்தே மாந்த நெஞ்சம்,
வருந்த வேண்டா! வாழ்கவன் தாளே.[1]

[யானையையும் இயலுகின்ற தேரையும் உடைய அதியமான; இயலுதல்-ஓடுதல். கீட்டினும் தாமதமானாலும். அருந்தேமாந்த-அருந்த ஏமாந்த; பரிசில் பொருளைப்பெற்று நுகரவேண்டும் என்று எண்ணி ஏங்கி நின்ற, நெஞ்சம்-நெஞ்சமே, தாள்-முயற்சி.]

யாழ் முதலிய கருவிகளால் இசை எழுப்பியும் தாமே பாடியும் இசையை வளர்க்கும் கலைஞர்கள் பாணர்கள். அவர்களுடைய மனைவியர் ஆடுவார்கள்; பாடுவார்கள். அவர்களை விறலியர் என்று கூறுவர். பாணரும் விறலியரும் எப்போதும் நாடு முழுவதும் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அங்கங்கே உள்ள செல்வர்களை அணுகித் தம் கலைத் திறமையைக் காட்டிப் பரிசு பெறுவார்கள். எங்கே கொடையிற் சிறந்தவர்கள் இருக்கிறார்கள் என்று நாடிச் செல்வார்கள்.


  1. புறநானூறு, 101