பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படர்ந்த புகழ்

31

ஒரு கொடையாளியிடம் பரிசில் பெற்ற பாணன் வேறு ஒரு பாணனைச் சந்தித்தால், தான் பெற்ற இன்பத்தை அவனும் பெறட்டும் என்று எண்ணி, அந்தக் கொடையாளியின் சிறப்பை அவனுக்கு எடுத்துரைப்பான்; அவன் இருக்கும் இடத்துக்குப் போக வழி இன்னது என்று கூறுவான். இப்படி வழி காட்டுவதாகப் புலவர்கள் பாடல்கள் பாடி வள்ளல்களை வாழ்த்துவார்கள். அந்த வகையில் அமைந்த பாடலை ஆற்றுப்படை என்று சொல்வர். ஒரு புலவன் வேறொரு புலவனிடம் தனக்குப் பரிசில் வழங்கிய வள்ளலிடம் செல்ல வழி காட்டுவதானால் அதற்குப் புலவராற்றுப்படை என்று பெயர் அமையும். கூத்துக்கலையில் வல்லவனுக்கு மற்றொரு கூத்தன் சொன்னால் அது கூத்தராற்றுப்படை என்ற பெயர் பெறும். அப்படியே பாணனைப் பார்த்துச் சொல்வதைப் பாணாற்றுப்படையென்றும், விறலிக்கு வழி காட்டுவதை விறலியாற்றுப்படையென்றும் பெயரிட்டு வழங்குவர். நேரே ஒருவனுடைய புகழைச் சொல்வதைவிட இப்படி ஆற்றுப்படை உருவத்தில் பாடுவது சுவையாக இருக்கும்.

ஔவையார் அதிகமான் புகழை விறலியாற்றுப் படையுருவில் அமைத்துப் பாடினார். அந்தப் பாட்டில் அதிகமானுடைய வீரத்தையும் கொடை இயல்பையும் இணைத்துப் பாடினாள். அந்தக் கற்பனையைச் சற்றே பார்ப்போம்.

ஒரு விறலி தன்னுடைய சுற்றத்தாருடன் தன் வறுமையைத் தீர்க்கின்ற செல்வர் எங்கே இருக்கிறார் என்று தேடிக்கொண்டு மலையும், குன்றும், நடக்க அரிய பொட்டல் காடுமாகப் போய்க்கொண்டிருக்கிறாள். உடன் வருகிறவர்கள் அவள் ஆடினாலும் பாடினாலும் வாசிப்பதற்குரிய இசைக் கருவிகளைக் கொண்டு வருகிறார்கள்; அவற்றை மூட்டையாகக் கட்டிச் சுமந்து வருகிறார்கள். அவள் கையில் வாய்