பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஔவையார் தூது

41


“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?”

“இங்கே உள்ள கருவிகள் செல்வப் பிள்ளைகளைப் போலப் பளபளவென்று விளங்குகின்றன; பீலியை அணிந்தும் மாலையைச் சூட்டிக் கொண்டும் அழகாகக் கிடக்கின்றன. பிடிகளை நன்றாகச் செப்பஞ் செய்து திருத்தமாக வைத்திருக்கிறீர்கள். துருவேறாமல் அடிக்கடி நெய் பூசி வருகிறீர்கள். இந்தக் கொட்டிலில் இவை பாதுகாப்பாக உள்ளன. ஆனால் அதிகமானுடைய படைக்கலங்களோ-”

தொண்டைமான் அவர் சொல்லப் போவதைக் கேட்க ஆவலுடன் இருந்தான். ஔவையார் தொடர்ந்து கூறினார்.

“அவைகளில் பலவற்றிற்கு முனை முரிந்து போயிருக்கும். பலவற்றிற்குக் கங்குகள் ஒடிசலாக இருக்கும்.”

“ஏன் அப்படி?”

“பகைவர்களைக் குத்தி அப்படி ஆயின. ஒரு கருவியாவது முழு உருவோடு இராது. எல்லாம் சிதைந்து உருக்குலைந்திருக்கும்.”

“அவற்றை அப்படியே படைக்கலக் கொட்டிலில் போட்டிருக்கிறார்களா?”

“படைக்கலக் கொட்டில் என்பது பேருக்குத் தானே அன்றிப் படைக்கலங்ங்கள் அங்கே இருப்பதில்லையே! போரிலிருந்து நுனி ஒடிந்தும் வளைந்தும் பூட்டுக் கழன்றும் பிடி உடைந்தும் வரும். அப்படியே கொல்லன் பட்டறைக்கு அதிகமான் அனுப்பி விடுவான். அங்கேதான் அவற்றைப் பார்க்கலாம். அவை செப்பஞ் செய்து வந்தால் அடுத்த போர் காத்திருக்கும். இந்த அழகு வருமா?”

மூதாட்டி உள்ளே ஒரு குறிப்பை வைத்துப் பேசினார். அதிகமானுடைய படைக்கலங்களை இழித்துக் கூறுவதுபோல அவனுடைய வீரத்தைப் புகழ்ந்தார்.