பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7. கோவலூர்ப் போரும்
குமரன் பிறப்பும்


திருக்கோவலூரில் மலையமான் திருமுடிக் காரி என்னும் வீரன் வாழ்ந்துவந்தான். ஒரு சிறிய நாட்டுக்குத் தலைவன் அவன். அந்த நாட்டுக்கு மலாடு என்று பெயர். மலையமான் என்பது அவனுடைய குடிப்பெயர். மலையமான்களுடைய நாடு மலையமான் நாடு. அந்தப் பெயர் நாளடைவிலே சிதைந்து மலாடு என்று ஆகிவிட்டது.

காரி சிறந்த வீரன். ஆற்றலும் ஆண்மையும் உள்ள பல வீரர்களே உடைய பெரும் படை ஒன்று அவனிடம் இருந்தது. தமிழ் நாட்டில் பெரிய மன்னர்களுக்குத் துணைப் படையாக அதைத் தலைமை தாங்கி நடத்திச்சென்று அம்மன்னர்கள் வெற்றியடையும்படி செய்வான் காரி. பாண்டியன் அழைத்தாலும் துணையாகப் போவான்; சோழன் அழைத்தாலும் போவான்; சேரமானுக்கும் துணையாகப் போவதுண்டு. அவன் யாருக்குத் துணையாகச் செல்கிறானோ அந்த மன்னன் வெற்றி அடைவது உறுதி என்ற புகழ் அவனுக்கு இருந்தது.

வெற்றி பெற்ற மன்னர்கள் காரிக்கு மிகுதியான பொருளும் பொன்னும் தருவார்கள்; ஊரைக் கொடுப்பார்கள்; தேர், யானை, குதிரைகளை வழங்குவார்கள். ஆதலின், அவனுக்கு எதனாலும் குறைவு இல்லாமல் வாழும் நிலை அமைந்தது. அப்படிப் பெற்றவற்றை அவன் தனக்கென்று வைத்துக்கொள்வதில்லை; புலவர்களுக்குக் கொடுப்பான்; பாணர்களுக்கு வழங்குவான்; ஏழைகளுக்கு ஈவான்; கூத்தர்களுக்கு அளிப்பான்.