பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவலூர்ப் போரும் குமரன் பிறப்பும்

47

ஓரியிடம் விற்போரில் சிறந்த வீரர்கள் பலர் இருந்தார்கள். அவர்கள் மிடுக்குடன் காரியின் படையை எதிர்த்து நின்றார்கள். காரிக்குக் காரியென்ற பெயரோடு ஒரு கருங்குதிரை இருந்தது. அவன் அதன்மேல் ஏறிவந்தான். ஓரிக்கும் ஓரியென்ற பெயரையுடைய பரி இருந்தது. போர் முகத்தில் இருசாரார் படையும் சந்தித்து மோதின. ஓரியின் நாடு ஆதலால் அங்குள்ள மக்களில் வலிமையுடைய இளைஞர்கள் அவன் படையில் சேர்ந்தார்கள். அறநெறி திறம்பிச் சேர மன்னனுடைய தூண்டுதலால் காரி படையெடுத்ததைப் பொறாமல் அவர்கள் கூட்டம் கூட்டமாகப் படையில் சேர்ந்து திறலுடன் போரிட்டனர்.

இரண்டு மூன்று நாட்கள் கடுமையாகப் போர் நடந்தது. காரி அதுவரையில் தன் பாசறையில் இருந்தபடியே இன்ன இன்னவாறு செய்ய வேண்டுமென்று கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தான். மூன்று நாட்களாக நடந்த போரில் யார் விஞ்சுவார்கள் என்று தெரியவில்லை. ‘இனி நாம் சும்மா இருத்தல் கூடாது’ என்று காரி தானே போர் முனைக்கு வந்தான்; காரியென்னும் குதிரையின்மேல் ஏறி அவன் போர்க்களத்தில் வந்து நின்றவுடன், அவனுடைய படை வீரர்களுக்குப் புதிய முறுக்கு ஏறியது. தம் வலிமையையெல்லாம் காட்டிப் போர் புரிந்தனர்.

ஓரி தன் குதிரையின்மேல் ஏறிவந்து போர் செய்தான். அவன் படையில் இப்போது தளர்ச்சி நிழலாடியது. படைத் தலைவர்களிலே சிலர் வீழ்ந்தனர். ஓரி தன் குதிரையை முன்னே செலுத்திக் காரியிருந்த இடத்தை அடைந்தான். இப்போது காரியும் ஓரியும் நேருக்கு நேராக நின்று போர் செய்தார்கள்[1]. காரி வைரம் பாய்ந்த மரம் போன்றவன்; எத்த


  1. சிறுபாணாற்றுப்டை 110-111.