பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

அதிகமான் நெடுமான் அஞ்சி

சொன்னான். கோட்டைக்குள் இருந்து பகைவர்கள் மேல் அம்பும் பிற படைகளும் வீசி ஓடச் செய்ய, இன்னதை இன்னபடி செய்யவேண்டும் என்று திட்டம் வகுத்தான். அவசியத்தி்னால் கோட்டையை விட்டு வெளியே வரவேண்டுமானால் அப்போது இன்னது செய்யவேண்டும் என்பதையும் வரையறை செய்தான். சேர மன்னன் படை புறப்பட்டுவிட்டது என்பதை ஒற்றரால் அறிந்தவுடன், எவ்வளவு உணவுப் பொருளைக் கோட்டைக்குள் சேமித்து வைக்கலாமோ, அவ்வளவையும் வைத்துக்கொண்டான். அகழியினுள் பாலங்களையெல்லாம் உள்வாங்கச் செய்தான். கோட்டைக் கதவுகளை மூடித் தாழிடச் சொன்னான்.

சேரன் படை வேகமாக வந்தது; யானைப் படையை முன்னாலே விட்டுப் பின்பு குதிரைப் படையை விட்டார்கள். அப்பால் தேர்ப்படை சென்றது. கடைசியில் காலாட்படை கடல்போலத் திரண்டு நடந்தது.

சேரன், அதிகமான் நாட்டுக்குள் வந்துவிட்டான். யாரும் அவனை எதிர்ப்பார் இல்லை. திடீரென்று எங்கிருந்தாவது படை வந்து தாக்குமோ என்று எதிர்பார்த்தான். ஒன்றும் வரவில்லை. தன் படை வருவதை முரசடித்துத் தெரிவித்தும் யாரும் எதிர்ப்படாததைக் கண்டு சேரன் வியந்தான்.‘ஒருகால் சமாதானம்செய்து கொள்ள விரும்புகிறானோ?’ என்றுகூட நினைத்தான். நாட்டுக்குள் படை நடந்துகொண்டிருந்தது. நாட்டு மக்கள் அவர்களை எதிர்கொள்ளவில்லை. போவதற்கு இடம் கொடுத்து விலகியிருந்தார்கள்.

படை தகடூரை அடைந்துவிட்டது. அதிகமான் கோட்டைக்குள் இருக்கிறான் என்பதை உணர்ந்தான் சேர மன்னன். யானைப் படைகளைக் கொண்டு கோட்டையைத் தாக்கவேண்டும் என்று தீர்மானித்தான். கோட்டைக்குமுன் அகழி இருந்தது. அதைத் தாண்டிச்