பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போரின் தொடக்கம்

75


“நம்முடைய ஒற்றர்கள் இந்த அகழியையும் கோட்டையையும் பற்றித் தெரிந்துகொண்டு வந்து சொல்ல வில்லையோ?” என்று ஒரு படைத் தலைவன் கேட்டான்.

“அகழி இருக்கிறது, கோட்டை இருக்கிறதென்று கூறினார்கள். நான் அவற்றை நெஞ்சிலே பதித்துக் கொள்ளவில்லை. அவனுடைய நாட்டுக்குள்ளே புகுவதற்கு முன்பே நம்மை எதிர்ப்பான் என்று எண்ணினேன். அவன் படையைச் சூழ்ந்துகொண்டு எளிதிலே அடிப்படுத்தி விடலாம் என்று மனப்பால் குடித்தேன். இப்படி ஒரு நிலை நேரும் என்பதை எண்ணிப் பார்க்கவில்லை. அகழி மலைப்பாம்பு போலக் குறுக்கிடுவதை நான் எண்ணியிருந்தால் வேலையும் வாளையும் தொகுக்கும்போதே மலைநாட்டு மூங்கில்களையும் தொகுத்திருப்பேனே!” என்று அங்கலாய்த்தான் சேரன்.

“இப்போது மலைநாட்டிலிருந்து மூங்கில்களை வருவிக்க இயலாதா?”

“அதற்கு அங்கே ஆட்கள் இருந்து வெட்டி அனுப்ப வேண்டும். மூங்கில்களை வண்டியில் போட்டு வந்தால் இங்கே வர எவ்வளவோ காலம் ஆகும். அதுவரையில் நாம் இங்கே கையைக் கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? மேலிருந்து வரும் அம்பினால் புண்பட்டுக்கொண்டே இருக்கலாமா?” -சேரன் வஞ்சிமா நகரத்தில் பேசிய பேச்சுக்கும் இதற்கும் எத்தனை வேற்றுமை ! அப்போது எத்தனை மிடுக்காகப் பேசினான்! அவன் குரலில் இப்போது சோர்வு தட்டியது.

“மன்னர்பிரான் இவ்வாறு மனம் இழந்து பேசுவது தகாது. தாங்களே இப்படிப் பேசினல் படைவீரர்களுக்கு உள்ள ஊக்கம் தளர்ந்துவிடும். இன்றுதான் போரைத் தொடங்கியிருக்கிறோம். நமக்கு ஒன்றும் பெரிய தீங்கு நேர்ந்துவிடவில்லை. மேலிருந்து வரும் படையினால் துன்பம் நேராத வகையில் நம்மை நாம்