இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பெரிய மிராசுதார் அவர்.
அவருக்கு நூற்றுக்கணக்கான காணிகள் இருந்தன. நன்செய்யும் உண்டு; புன்செய்யும் உண்டு. நெல்லும் வாழையும் விளையும் நிலங்களும், கம்பும் கடலையும் விளையும் காடுகளும் அவருக்குச் சொந்தமாக இருந்தன. அவ்வளவு பெரிய பணக்காரர், சென்னையில் பெரிய மாளிகை கட்டிக்கொண்டு நாகரிக மோஸ்தரில் வாழ ஆரம்பித்தார். நிலங்களைக் குத்தகைக் காரர்களிடமும் காரியஸ்தர்களிடமும் விட்டுவிட்டு, நகர வாழ்க்கையின் கோலாகலத்திலே நீந்தி விளையாடினர்.
அவருக்கு ஒரு பிள்ளை. அவன் காலேஜில் படித்தான்; பிறகு சீமைக்குப் படிக்கப் போனான்.