பக்கம்:அதிசயப் பெண்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது50

அதிசயப் பெண்


“இருக்கட்டும்; பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று சொல்லி வைத்தியர் போய்விட்டார்.

மட்டியப்பனுக்கு அப்போது ஒரு யோசனை உண்டாயிற்று; இப்போதைக்கு ஒரு பொய்யைச் சொல்லி அனுப்பிவிட்டோம். நாளைக்கு வந்தால் என்ன செய்வது?’ என்று எண்ணி மிகவும் கவலைப்படலானான். கடைசியில் ஒரு தீர்மானத்துக்கு வந்தான்.

அவன் எதிர்பார்த்தபடியே அடுத்த வாரம் வைத்தியர் அவனிடம் வந்து கத்திரிக்காய் கேட்டார். மட்டியப்பன் ஒரு பதிலை முன்பே யோசித்து வைத்திருந்தான். அவன் தன் தலையைச் சொறிந்துகொண்டே, “நான் சொல்லுகிறேன் என்று கோபித்துக்கொள்ளக் கூடாது. அன்றைக்கே நான் விஷயத்தைச் சொல்லியிருப்பேன். எங்கள் வீட்டுக் கத்திரிக்காயை இந்த ஊராருக்குக் கொடுக்கக் கூடாது” என்றான்.

வைத்தியர் ஆச்சரியம் அடைந்தவராய், “என்ன காரணம்?” என்று கேட்டார்.

“எங்கள் பாட்டி செத்துப் போகும்போது கத்திரிக் காய்க் கறி வேண்டும் என்று கேட்டாளாம். அப்போது இந்த ஊரில் இரண்டு மூன்று வீடுகளில் கத்திரிச் செடி பயிரிட்டிருந்தார்களாம். என் தகப்பனர் அவர்களைக் கத்திரிக்காய் வேண்டும் என்று கேட்டபோது ஒருவராவது கொடுக்கவில்லையாம். என் பாட்டி தன் ஆசை நிறைவேறாமலே செத்துப் போய்விட்டாள். என் தகப்பனார், இனிமேல் நானே வீட்டில் கத்திரிச் செடி பயிர் பண்ணப் போகிறேன். இந்த ஊரில் யார் கேட்டாலும்