பக்கம்:அத்தை மகள்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16அவனைப் பிரிய நேர்ந்தது. அவன் 'மேல் படிப்பு'க்காக டவுனுக்குப் போனான் படித்துப் பாஸ் பண்ணியதும் உத்தியோக வேட்டையில் ஈடுபட்டு, ஏதோ ஒரு வேலை பெற்று எங்கோ ஒரு இடத்திற்குப் போய்ச் சேர்ந்தான். அதன் பின் அவன் அடிக்கடி ஊர் வருவதில்லை. எப்பவாவது வந்தாலும் ரொம்ப நாட்கள் தங்க முடிவதில்லை. தங்கியிருந்த சமயங்களில் ரத்தினத்தை அவன் கவனித்தது உண்டு. என்ன ரத்னம்? செளக்கியம்தானா? என்று தான் கேட்க முடிந்தது. அவளைக் கேலி செய்து அழவைத்த காலம் போய்விட்டது என்றே தோன்றியது. வாழ்க்கை வெயில் அவன் உள்ளத்தை வதங்கச் செய்து கொண்டிருந்தது.

இந்தச் சமயம் அவன் வந்ததற்கு முக்கிய காரணம் உண்டு. அவன் அங்கு வந்து இரண்டு வருஷங்களுக்கு அதிகமாகவே ஆகியிருக்கும். வேலைத் தொல்லை. ஒய்வு கிடைப்பதில்லை. இதனாலெல்லாம் அவன் அடிக்கடி வந்து போக முடியவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். -

'பிள்ளைகளுக்கென்ன வயசு வருதா, போகுதா? அததைச் செய்யவேண்டிய காலத்திலே முடிச்சு வச்சிர வேண்டியது நம்ம கடமை. அப்புறம் அவுக பாடு. ரத்தினத்துக்கும் வயசு பதினெட்டாச்சு, அவனுக்கும் வயசாச்சு. மாப்பிள்ளை கை வசமே இருக்கும்போது காலா காலத்திலே கல்யாணத்தைப் பண்ணாம இருந்தா என்ன அர்த்தம் ?'--- இப்படிக் கேட்டார்கள் ஊர்க்காரர்கள். ரத்தினத்தின் அம்மா இருக்கிறாளே---அவனுடைய அத்தை அவள் அந்தராத்மாவும் திமிஷத்துக்கு நிமிஷம் இதையே கேட்கத் தொடங்கியது. இனியும் காத்திருப் பது தப்பு என்ற ஞானோதயம் பிறந்ததனால், இந்த வருஷம் எப்படியும் கல்யாணத்தை முடித்துவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்தாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/18&oldid=975947" இருந்து மீள்விக்கப்பட்டது